IPL 2026: பவர்-பிளேயில் மோசமாக ஆடும் அணி இதுதான்.. டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்க காரணமே இதுதான்
டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மைதானமான அருண் ஜெட்லி ஸ்டேடியத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்த அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போலச் சரிந்து வருவது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக பவர்பிளே (Powerplay) எனப்படும் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களில் அந்த அணி சந்திக்கும் சரிவு, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் திணறி வந்தாலும், ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கும் 'பவர்-பிளே' ஓவர்களில் அந்த அணி காட்டும் சொதப்பல் தான் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் முடிவு தவறாக அமைந்தது. வெறும் 11 ஓவர்களுக்குள் அந்த அணியின் 5 முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

புள்ளிவிவரங்களின்படி, 2026 ஐபிஎல் சீசனில் பவர்-பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணியாக டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் அந்த அணி பவர்-பிளேயில் மட்டும் 21 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துள்ளது. ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 23.85 ரன்கள் மட்டுமே எடுக்கும் டெல்லி அணி, 8.35 என்ற குறைவான ரன் ரேட்டை மட்டுமே கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த அணி சந்தித்துள்ள டாட் பந்துகளின் சதவீதம் 46.4 ஆகும். அதாவது முதல் 6 ஓவர்களில் பாதி பந்துகளில் அந்த அணி ரன் ஏதும் எடுக்காமல் வீணடிக்கிறது.
இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் டெல்லி அணி ஒரு மோசமான சாதனையைப் படைத்தது. அந்தப் போட்டியில் பவர்-பிளே முடிவதற்குள்ளேயே 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி நிலைகுலைந்தது. புவனேஸ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இது ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்-பிளேயில் ஒரு அணி எடுத்த மிகக்குறைந்த ஸ்கோராகும். இதற்கு முன்பு 2022-ல் ஹைதராபாத் அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததே சாதனையாக இருந்தது.
தொடர்ச்சியான இந்தச் சரிவுகளால் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. நட்சத்திர வீரர்கள் இருந்தும், ஆரம்பக்கட்ட ஓவர்களில் நிதானத்தை இழந்து விக்கெட்டுகளைத் தாரை வார்ப்பது அந்த அணியின் பிளே-ஆப் கனவைச் சிதைத்து வருகிறது. இனி வரும் போட்டிகளிலாவது டெல்லி அணி தனது பவர்-பிளே பேட்டிங்கைச் சீரமைக்குமா அல்லது இதேபோல மோசமான சாதனைகளைத் தொடருமா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
