போராடி தோற்ற பெங்களூரு… ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்து கலக்கிய டெல்லி
டெல்லி:டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயித்த 188 ரன்களை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் முக்கிய ஆட்டத்தில் டெல்லி அணியும், பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது. தொடக்கத்திலும், இறுதியிலும் அதிரடியாகவும் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 188 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பெங்களூரு களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து, அசத்தலாக ஆட்டத்தை தொடர்ந்தார் பார்த்தீவ் படேல்.

டி வில்லியர்ஸ், கோலி
அணிக்கு சராசரியாக ஒரு ஓவரில் 10 ரன்கள் வீதம் வந்து கொண்டிருந்தது. ஸ்கோர் 63 ரன்களை எட்டிய போது பார்த்தீவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டி வில்லியர்ஸ் களத்துக்கு வர, கோலியும் அவரும் கைகோர்த்தனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி
கோலியும், வில்லியர்சும் நிச்சயம் மாயாஜாலம் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் அக்சர் படேல் பந்தில் வீழ்ந்தார் கோலி. அரங்ககத்தில் பெங்களூரு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

டி வில்லியர்ஸ் ஆட்டமிழப்பு
அதன்பின்னர் டுபேவும், டி வில்லியர்சும் அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கினர். ஸ்கோர் 103 ரன்கள் என்ற போது அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் பெவிலியன் திரும்பினர்.

உறுதியான தோல்வி
12வது ஓவரில் அவரது விக்கெட் விழுந்தது. 13வது ஓவரில் கிளாசன் 3 ரன்களில் வெளியேற ஆட்டம் ஒட்டு மொத்தமாக டெல்லியின் கைகளுக்கு சென்றது. அதே ஓவரில் டுபேயும் ஆட்டமிழக்க பெங்களூரு அணியின் தோல்வி உறுதியானது.

வென்றது டெல்லி
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் பெங்களூரு அணியினர் வெற்றி பெற முயற்சி செய்தனர். ஆனால் பலன் இல்லை. முடிவில் 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி
இதன் மூலம் பெங்களூரு அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. பிளே ஆப் சுற்றிலும் தமக்கான இடத்தையும் உறுதி செய்தது.


Click it and Unblock the Notifications