RR vs DC: அங்க பராக் 50..! இங்க பன்ட் 53..! கடைசியா ஜெயிச்சது டெல்லி.. நடையை கட்டிய ராஜஸ்தான்
டெல்லி:ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அழகாக வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 53வது போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது. போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட டெல்லி அணியும், வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இருக்கும் ராஜஸ்தானும் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் ஸ்மித் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், மீண்டும் ரகானே கேப்டன் பொறுப்பேற்கிறார். ஸ்மித் மற்றும் உனட்கட் வெளியில் அமர்த்தப் பட்டு, இஷ் சோதி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் ஆடுகின்றனர். டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா மற்றும் கீமோ பால் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட்டுகள் சரிவு
துவக்க வீரர்களாக லிவிங்ஸ்டனும், கேப்டன் ரகானேவும் களம் இறங்கினர். வெறும் 2 ரன்களில் இஷாந்த் பந்தில், தவானிடம் கேட்ச் கொடுத்து ரகானே வெளியேறினார். அவர் தொடங்கி வைத்த விக்கெட் வீழ்ச்சி அடுத்தடுத்து தொடர்ந்தது. லிவிங்ஸ்டன் 14 ரன்களில் அவுட்டானார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட சஞ்சு சாம்சன் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

வந்து சென்றனர்
ராஜஸ்தான் அணியில் வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். இளம் வீரர் பராக் மட்டும் களத்தில் நின்றார். அவருக்கு ஆதரவாக யாரும் நிலைக்க வில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களே எடுத்தது. 100 ரன்களை கூட எட்டாது என்று நினைத்திருந்த வேளையில், இளம் வீரர் பராக் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 115 ரன்களை எட்ட காரணமாக இருந்தார்.

எளிதான இலக்கு
இதையடுத்து 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி களம் கண்டது. தவானும், பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்காக ஆடினர். தவான் 16 ரன்களும், பிரித்வி ஷா 8 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களுடன் திருப்தி அடைந்தார்.

விக்கெட்டுகள் சரிவு
இங்ராம், ரூதர்போர்டு என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, ராஜஸ்தான் அணியினர் குஷியாகினர். ஆனால் களத்தில் ரிஷப் பன்ட் மட்டும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 53 ரன்கள் எடுத்தார்.

வென்றது டெல்லி
முடிவில், 17வது ஓவரில் டெல்லி அணி 121 ரன்கள் எடுத்து, ராஜஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. தோற்று போன ராஜஸ்தான் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றும் இனி அந்த அணிக்கு இல்லை. வாழ்வா, சாவா என்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் தோற்றது, அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications