டெல்லி டேர் டெவில்ஸுடன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் முக்கிய மோதல்

3வது ஐபிஎல் தொடரின் அரை இறுதிச் சுற்று நெருங்கி விட்டது. அந்த சுற்றுக்குப் போயுள்ள ஒரே அணியாக மும்பை மட்டுமே உள்ளது. மற்ற 7 அணிகளில் பஞ்சாப் போட்டியிலிருந்து விலகி விட்டது. மீதமுள்ள சென்னை, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் அணிகளுக்கிடையே தற்போது கடும் போட்டி காணப்படுகிறது.
இதில் பெங்களூர் அணி தனது வாய்ப்புகளை சற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சம புள்ளிகளுடன் உள்ள சென்னையும், டெல்லியும் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கவுள்ளன.
இரு அணிகளும் 12 போட்டிகளில் ஆடி 6ல் வென்று, 6ல் தோற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில், டெல்லிக்கு மேலே சென்னை உள்ளது.
எனவே இன்றைய போட்டியில் வெல்ல வேண்டியது இரு அணிகளுக்கும் அவசியமாகும்.
ஏற்கனவே டெல்லியில் நடந்த சுற்றுப் போட்டியில், டேர்டெவில்ஸை வென்றுள்ளது சென்னை. எனவே அந்த நம்பிக்கையுடன் இன்று டெல்லியை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.
மேலும் சேப்பாக்கத்தில் கடைசியாக நடந்த நான்கு போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் வெல்ல வேகத்துடன் உள்ளது சென்னை.
இன்று நடைபெறும் போட்டிதான் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசிப் போட்டியாகும். இந்தப் போட்டியை முடித்துக் கொண்டு தர்மசாலாவில் நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது சென்னை.
சென்னை அணியில் முரளி விஜய், சுரேஷ் ரெய்னா அற்புதமான பார்மில் உள்ளனர். மாத்யூ ஹெய்டனும் சப்போர்டிவாக இருக்கிறார். பந்து வீச்சில் போலிங்கர் பிரமாதமாக வீசி வருகிறார். முரளிதரன், அஷ்வின் ஆகியோரும் நல்ல ஆதரவு தருகின்றனர்.
ஹோம் பிட்ச் என்பதால் இன்றைய ஆட்டத்தின் போது ரசிகர்களின் ஆதரவு அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் சென்னையில் நடைபெறும் கடைசிப் போட்டி என்பதால் ரசிகர்கள் முழு அளவில் மைதானத்தில் குழுமவுள்ளனர்.
மறுபக்கம் டெல்லி அணி அடிபட்ட புலியாக காணப்படுகிறது. தனது கடைசிப் போட்டியில் மும்பையிடம் பரிதாபமாக தோற்றது டெல்லி. ஏற்கனவே சொந்த மண்ணில் சென்னையிடம் தோல்வியுற்ற அவமானத்துடன் இன்று சென்னையை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
டேவிட் வார்னர், கம்பீர், ஷேவாக், திணேஷ் கார்த்திக் என நல்ல பேட்டிங் வரிசை டெல்லியிடம் உள்ளது. டிவில்லியர்ஸ், பால் காலிங்வுட் ஆகியோரும் உள்ளனர். பந்து வீச்சைப் பொறுத்தவரை அமீத் மிஸ்ரா, ஆசிஷ் நேஹ்ரா மட்டுமே ஸ்டிராங்காக உள்ளனர். டெல்லியின் இந்த பலவீனத்தை சென்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியைப் பொறுவத்தவரை சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறியுள்ளார். பந்து வீச்சைத் தொடங்குவதும் அவரே. அது நல்ல பலனைக் கொடுத்துள்ளதால், இன்றைய போட்டியிலும் அஷ்வினே பந்து வீச்சைத் தொடங்குவார் என்று தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications