ஷமி "அவுட்".. டெல்லி டேர்டெவில்ஸுக்கு பெருத்த அடி!
டெல்லி: வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் முழங்கால் காயம் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் ஷமி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஷமி, உலகக் கோப்பைப் போட்டியில் 18 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். உலகக் கோப்பைப் போட்டியின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு புவனேஷ் குமார் அவருக்குப் பதில் இடம் பெற்றார்.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஷமி டெல்லி அணியில் இடம் பெற்று ஆடுவதாக இருந்தது. ஆனால் காயம் பெரிதாகியுள்ளதால் அவர் இடம் பெறவில்லை. முழுத் தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு விரைவில் முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று தெரிகிறது.
அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்களாகும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி நேற்றுதான் தனது முதல் வெற்றியைப் பெற்றது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications