டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் என்ற புதிய டி20 தொடரின் முதல் போட்டியில் புரானி டில்லி 6 அணியில் இடம் பெற்று இருந்தார் ரிஷப் பண்ட். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அவர் போட்டியில் தட்டுத் தடுமாறி ரன் சேர்த்ததை பார்த்த ரசிகர்கள் உறைந்து போனார்கள்.
முதல் போட்டியில் புரானி டில்லி 6 அணியும், சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதின. இதில் புரானி டில்லி 6 அணியில் ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, லலித் யாதவ் போன்ற சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியில் ஒரு சர்வதேச வீரர் கூட இடம் பெறவில்லை.

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த புரானி டில்லி 6 அணிக்காக மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சுழற் வீச்சாளர்களை சந்தித்த போது தடுமாறினார். ஒரு கட்டத்தில் 14 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது அவரது சக வீரர் அர்பித் ராணா 37 பந்துகளில் அரை சதம் கடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிடில் ஓவர்களில் ஆஃப் ஸ்பின்னர் ஆயுஷ் பதோனி மற்றும் மிஸ்டரி ஸ்பின்னர் திக்வேஷ் ரதிக்கு எதிராக ரிஷப் பண்ட் ரன் குவிக்க முடியாமல் திணறினார். மிடில் ஓவர்களில் 27 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஒட்டுமொத்தமாக 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 109 ஆக மட்டுமே இருந்தது.
அவரது அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது. இதில் இருந்தே ரிஷப் பண்ட் எந்த அளவுக்கு மோசமாக ஆடி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். இதே போட்டியில் 21 வயதான வன்ஷ் பேடி 19 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் புரானி டில்லி 6 அணி வெற்றி பெற்ற போதும் ரிஷப் பண்டின் ஆட்டம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் எட்டு இன்னிங்க்ஸில் 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரது சராசரி 24, ஸ்ட்ரைக் ரேட் 127 ஆக இருந்தது. தற்போது சர்வதேச அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் உள்ளூர் போட்டியில் தடுமாறி இருக்கிறார். அடுத்து வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம் பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.