டெல்லி: 2025 டெல்லி பிரீமியர் லீக் (DPL) தொடரின் எலிமினேட்டர் போட்டியில், வீரர்கள் களத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தள்ளிக்கொண்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் நடந்த இந்த அநாகரிகமான செயல், ரசிகர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சவுத் டெல்லி அணி, 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணி பேட்டிங் செய்தது. போட்டியின் 11-வது ஓவரை, சவுத் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமன் பார்தி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை, வெஸ்ட் டெல்லி அணியின் தொடக்க வீரர் கிரிஷ் யாதவ் சிக்ஸருக்குத் தூக்க முயன்றார். ஆனால், பந்து நேராக பவுண்டரி லைன் அருகே நின்றிருந்த அன்மோல் சர்மாவிடம் கேட்ச் ஆனது.
கிரிஷ் யாதவ் ஆட்டமிழந்ததும், பந்துவீச்சாளர் அமன் பார்தி அவரை முறைத்துப் பார்த்து ஏதோ கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிரிஷ் யாதவ், பெவிலியன் திரும்பாமல், மீண்டும் பிட்ச் அருகே வந்து பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சூழ்நிலை மோசடைவதைக் கண்ட சவுத் டெல்லி வீரர் சுமித் மாத்தூர், ஆக்ரோஷமாக கிரிஷ் யாதவை நோக்கி ஓடிவந்து, விரலை நீட்டி எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, இரு அணி வீரர்களும் ஒன்று கூடி, ஒருவரையொருவர் தள்ளிச் சென்றதால், களத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
நிலைமை கைமீறிச் செல்வதைப் பார்த்த களத்தில் இருந்த பெண் நடுவர், உடனடியாகத் தலையிட்டு, ஆட்டமிழந்த வீரரான கிரிஷ் யாதவைக் களத்தை விட்டு வெளியேறுமாறு கண்டிப்புடன் கூறினார். அதேசமயம், வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணியின் கேப்டனான நித்திஷ் ராணா, சண்டையிட்டுக் கொண்டிருந்த சுமித் மாத்தூரின் தோள் மீது கைபோட்டு, அவரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார். நித்திஷ் ராணா மற்றும் பெண் நடுவரின் சரியான தலையீட்டால், பெரும் கைகலப்பு தவிர்க்கப்பட்டது.
முதல் மோதல் ஓய்வதற்குள், ஆட்டத்தில் மற்றொரு அனல் பறக்கும் சம்பவம் அரங்கேறியது. இந்த முறை, வெஸ்ட் டெல்லி லயன்ஸ் கேப்டன் நித்திஷ் ராணாவுக்கும், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதிக்கும் இடையே நேரடி மோதல் வெடித்தது.
திக்வேஷ் ரதி பந்துவீச ஓடிவந்து, கடைசி நேரத்தில் பலமுறை பந்துவீசாமல் பின்வாங்கினார். இது பேட்டிங் முனையில் இருந்த ராணாவை எரிச்சலடையச் செய்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ரதி பந்துவீச ஓடிவந்தபோது, ராணா வேண்டுமென்றே கிரீஸை விட்டு வெளியேறினார்.
இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டது. இதன் உச்சக்கட்டமாக, திக்வேஷ் ரதியின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் ராணா சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். சிக்ஸர் அடித்த பிறகு, இரு வீரர்களும் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக வார்த்தைகளால் தாக்கிக்கொண்டனர். சக வீரர்கள் மற்றும் நடுவர் உடனடியாகத் தலையிட்டு, இருவரையும் பிரித்துவிட்டதால், நிலைமை கைகலப்பாக மாறாமல் தடுக்கப்பட்டது.
ஏற்கெனவே கிரிஷ் யாதவ் ஆட்டமிழந்தபோது நடந்த மோதலால் மைதானத்தில் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இந்த இரண்டாவது சம்பவம், போட்டியின் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டாலும், அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் நித்திஷ் ராணா, தனது ஆட்டத்தால் அனைத்திற்கும் பதிலடி கொடுத்தார். வெறும் 55 பந்துகளைச் சந்தித்த அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 134 ரன்கள் விளாசி, தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால், வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணி 17 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, குவாலிஃபயர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது.