விஜய் ஹசாரே தொடரில் தேவுதட் படிக்கல் சாதனை.. இதுவரை யாரும் செய்யாத ரெக்கார்ட்
அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை தேவ்தத் படிக்கல், படைத்துள்ளார். இந்த தொடரில் மூன்று வெவ்வேறு சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். நடப்பு 2025-26 சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 91 ரன்கள் உள்ளிட்ட நான்கு சதங்களுடன் அவர் இதுவரை 605 ரன்களைக் குவித்துள்ளார்.
கர்நாடகா அணிக்காக விஜய் ஹசாரே டிராபி 2025-26 போட்டிகளில் களமிறங்கியுள்ள படிக்கல், தனது அசத்தலான ஆட்டத்தால் சிறப்பாக விளையாடி வருகிறார். அகமதாபாத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 82 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தபோது, அவர் 600 ரன்கள் மைல்கல்லை எட்டினார்.

இந்த சீசனில், பெங்களூரூவைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் படிக்கல், தனது ஆட்டத்தை சதங்களுடன் தொடங்கினார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 147 ரன்களையும், கேரளாவிற்கு எதிராக 124 ரன்களையும் அடித்தார். பிறகு, தமிழ்நாட்டிற்கு எதிரான கர்நாடகாவின் மூன்றாவது எலைட் பிரிவு 'ஏ’ போட்டியில் 22 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிரான அடுத்த இரண்டு போட்டிகளிலும் படிக்கல் முறையே 113 மற்றும் 108 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல், இதுவரை இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கர்நாடகா அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் படிக்கல் தனது முதல் போட்டியை 2019 செப்டம்பர் 26 அன்று பெங்களூரில் ஜார்க்கண்ட்டுக்கு எதிராக விளையாடினார். அவர் 2019-20 சீசனில் 11 போட்டிகளில் 609 ரன்களையும், தொடர்ந்து 2020-21 சீசனில் 7 போட்டிகளில் 737 ரன்களையும் குவித்துள்ளார். நடப்பு ஆண்டின் 605 ரன்கள் உட்பட, அவர் மூன்று முறை 600 ரன்களுக்கு மேல் கடந்துள்ளார்.
விஜய் ஹசாரே டிராபியின் ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் மொத்தம் 10 பேர் உள்ளனர். இவர்களில் படிக்கல், மயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். எனினும், மூன்று வெவ்வேறு சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற தனிச்சிறப்பை படிக்கல் பெற்றுள்ளார்.
அபார ஃபார்மில் உள்ள தேவ்தத் படிக்கல், கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், ஜெகதீசனின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறலாம். 2022-23 விஜய் ஹசாரே டிராபி சீசனில், தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் 8 போட்டிகளில் 830 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். தற்போதைய நிலையில், அந்த சாதனையை முறியடிக்க படிக்கலுக்கு இன்னும் 226 ரன்கள் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications