யாருப்பா நீ? 4 சிக்ஸ், 24 ஃபோர்.. 193 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல்.. ரஞ்சி ட்ராபியில் அதிரடி
பெங்களூர் : 4 சிக்ஸ், 24 ஃபோர் அடித்து ரஞ்சி ட்ராபியில் வெறியாட்டம் ஆடி இருக்கிறார் தேவ்தத் படிக்கல். ஒருநாள் போட்டி போன்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அவர் 7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இந்திய அளவில் நடைபெறும் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் கர்நாடகா - பஞ்சாப் இடையே ஆன போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய கர்நாடகா அணியில் கேப்டன் மயங்க் அகர்வால் துவக்க வீரராக இறங்கி டக் அவுட் ஆனார். அடுத்து தேவ்தத் படிக்கல் மூன்றாம் வரிசையில் களமிறங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அவர் 24 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து 216 பந்துகளில் 193 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 89 ஆக இருந்தது. ஒருநாள் போட்டி போல அவர் ஆடிய அதிரடி ஆட்டத்தால் கர்நாடகா ஸ்கோர் எகிறியது. எனினும், இரட்டை சதத்தை 7 ரன்களில் தவறவிட்ட சோகத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் தேவ்தத்படிக்கல். கர்நாடகா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே 118 ரன்கள் குவித்தார். கர்நாடகா அணி இரண்டாம் நாளின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து இருந்தது.
முதல் தர டெஸ்ட் போட்டிகளில் இந்த 193 ரன்களே தேவ்தத் படிக்கலின் அதிகபட்ச ரன்கள் ஆகும். சில ஆண்டுகள் முன்பு தேவ்தத் படிக்கல் இளம் வீரராக ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று கோலியுடன் பேட்டிங் செய்து இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் 2022 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 7.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.
தற்போது லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு அவர் அணி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி இருக்கும் நிலையில் தேவ்தத் படிக்கல் லக்னோ அணியில் சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications