மும்பை: கர்நாடகா மற்றும் ஆர்சிபி அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் இந்திய ஒருநாள் அணியின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லும் வகையில் விஜய் ஹசாரே ட்ராபியில் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் தேர்வாளர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் வாய் பிளக்க வைத்துள்ளது. "தொடர்ந்து சதம் அடித்து தள்ளும் ஒரு வீரரை இன்னும் எத்தனை நாள் தான் வெளிய உட்கார வைப்பீங்க?" என்று பிசிசிஐயை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
நடப்பு விஜய் ஹசாரே தொடரில் (2025-26) படிக்கல், தான் விளையாடிய 4 போட்டிகளில், 3 சதம் அடித்து மிரட்டியுள்ளார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 147 ரன்கள், கேரளாவுக்கு எதிராக 124 ரன்கள், தமிழ்நாடு அணிக்கு எதிராக மட்டும் சிறிய சறுக்கல் ஏற்பட்டு 22 ரன்கள், மீண்டும் பாண்டிச்சேரிக்கு எதிராக 113 ரன்கள் என ரன் மெஷினாக செயல்பட்டு இருக்கிறார்.

இந்த நான்கு போட்டிகள் மட்டுமல்ல. அவரது லிஸ்ட் ஏ புள்ளிவிவரமும் வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளது. இதுவரை 36 போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல், 2364 ரன்களை குவித்துள்ளார். இவருடைய சராசரி என்ன தெரியுமா? 81.51!
மொத்தம் 24 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதில் 12 சதம் மற்றும் 12 அரைசதம் அடங்கும். இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் இப்படி ஒரு ஆட்டத்தை பார்ப்பது அரிதிலும் அரிது.
இதைத் தொடர்ந்து தான் சமூக வலைதளத்தில் பெரிய விவாதமே வெடித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடன் படிக்கலை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "சுப்மன் கில்லை விட தேவ்தத் படிக்கல் எவ்வளவோ மேல். அவருக்கு நிரந்தரமாக வாய்ப்பு கொடுங்க" என்று ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், "4 மேட்ச்ல 3 செஞ்சுரி, 405 ரன்கள்.. இதுக்கு மேல ஒருத்தர் எப்படி தகுதியை நிரூபிக்க முடியும்? டெக்னிக், டைமிங் எல்லாம் பக்காவா இருக்கு. இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தே ஆக வேண்டும்" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
இன்னும் சிலர், "இவருக்கு ஆதரவு தர சரியான பிஆர் (விளம்பர நிறுவனம்) இல்லையோ? அதனால் தான் வாய்ப்பு கிடைக்கலையா?" என்று காட்டமாக விமர்சித்துள்ளனர். "தென்னாப்பிரிக்கா ஃப்ளைட்ல (2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை) இவரை ஏத்தி அனுப்புங்க, யாரை வேணாலும் டிராப் பண்ணுங்க" என்றும் ஆவேசமாக சிலை குறிப்பிட்டு வருகின்றனர்.
அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வரவுள்ளது. ரோஹித், கோலி போன்ற சீனியர்கள் அணிக்கு திரும்பும் நிலையில், டாப் ஆர்டரில் படிக்கலுக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய ஜெர்சியை அணிந்திருந்தாலும், ஒருநாள் போட்டியில் அவருக்கு இன்னும் சரியான வாய்ப்பு அமையவில்லை.
ஆனால், படிக்கல் இப்படி கதவை உடைக்கும் அளவுக்கு ஆடும்போது, தேர்வாளர்கள் அவரை இனியும் புறக்கணிப்பது கடினம். 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து இப்போதே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் குரலாக உள்ளது.