அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கான்வே மற்றும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இருவரும் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் சேர்த்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் பிலிப்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 283 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் வில் யங் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி நடையை கட்டினார்.
இதன் பின் டெவோன் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி இணைந்தது. முதல் சில ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த கூட்டணி 6வது ஓவர் முதல் அதிரடியில் களமிறங்கியது. ஒவ்வொரு ஓவருக்கும் இருவரும் பவுண்டரியை விளாச தொடங்க, இங்கிலாந்து அணி சூழலை புரிந்து ஸ்பின்னர்களை கொண்டு வருவதற்குள் பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆட்டத்தை வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர்.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 81 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் இருவரும் பவுண்டரி, சிக்சரை ஒவ்வொரு ஓவருக்கும் அடித்தனர். இதனால் சிறப்பாக ஆடிய ரச்சின் சிக்சர் அடித்து 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய கான்வே பவுண்டரியை விளாசி 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலமாக இரு பேட்ஸ்மேன்களுமே 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
தற்போது வரை நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது. இந்திய ஆடுகளங்களை நன்றாக புரிந்து கொண்ட நியூசிலாந்து அணி சரியாக கணித்து அட்டாக்கை செயல்படுத்தி வருகிறது. இது இங்கிலாந்து அணி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் போட்டியிலேயே தோல்வியடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.