கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த போட்டியை சுமார் 61 ஆயிரம் பேர் கண்டு களித்தனர். மைதானம் முழுவதுமே மஞ்சள் படையாக இருக்கிறது என ரவி சாஸ்திரி புகழாரம் கூறியுள்ளார். தோனியின் கடைசி சீசன் என்பதால் ரசிகர்கள் பலரும் தோனிக்காக மைதானத்தில் குவிந்து இருந்தார்கள்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி முதல் பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றியைப் பெற்று இருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் செல்ல பாதை எளிதாகிவிட்டது. இந்த நிலையில் தொடக்க வீரர் கான்வே 4 முறை தொடர்ந்து அரை சதம் அடித்திருக்கிறார். இது குறித்து பேசிய கான்வே, ருதுராஜ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது என்னுடைய பதற்றத்தை குறைக்கிறது.
நான் சிறப்பாக விளையாடுகிறேன் என்றால் அதற்கு பாதி பாராட்டு ருதுராஜ்க்கு தான் செல்ல வேண்டும். எனது உடலுக்கு வரும் பந்தை எதிர்கொள்ள எப்போதுமே எனக்கு பிரச்சனை இருந்தது. தற்போது நான் அதை சரி செய்து வருகிறேன். சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள என்னுடைய காலை நான் பயன்படுத்தி விளையாடுகிறேன்.
சென்னை அணியில் உள்ள கலாச்சாரம் மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கிறது. இதனால் தான் நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறோம். நாட்டில் எங்கு சென்று விளையாட்டினாலும் அது எங்களுக்கு சொந்த மண்ணில் விளையாடும் எண்ணத்தை தான் கொடுக்கிறது. இதற்கு முழு காரணம் தோனி தான் என்று கான்வே பாராட்டி உள்ளார்.
கே கே ஆர் அணியின் தோல்வி குறித்து பேசிய நிதிஷ் ரானா, இது போன்ற தொடர்களில் தொடர்ந்து நாங்கள் ஒரே தவறை செய்து வருகிறோம். எதிர் அணியை 235 ரன்கள் அடிக்க விட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று நிதிஷ் ரானா கூறியுள்ளார்.