"இளம் தலைமுறைக்கு வழிவிடுகிறேன்".. இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தனஞ்செயா டி சில்வா விலகல்
கொழும்பு: இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தனஞ்செயா டி சில்வா உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளாக இலங்கை டெஸ்ட் அணியை வழிநடத்தி வந்த தனஞ்செயா டி சில்வா, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டு தேர்வுக்குழுவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "அடுத்த தலைமுறை இளம் வீரர்களிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது என்பதே எனது முடிவு" என்று தெரிவித்துள்ளார்.
தனஞ்செயா டி சில்வா விலகியதை அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் புதிய இலங்கை டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் 22 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தி இருக்கிறார்.
தான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், ஒரு சாதாரண வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தனஞ்செயா டி சில்வா தெளிவுபடுத்தியுள்ளார். அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. அவரது சிறப்பான பங்களிப்பிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 சீசனுக்கு முன்னதாக திமுத் கருணாரத்னேவிடமிருந்து பொறுப்பை ஏற்ற தனஞ்செயா டி சில்வா, இலங்கையின் 18-வது டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டார். இவர் தலைமையில் இலங்கை அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 8 தோல்விகள் மற்றும் 3 டிரா பதிவு செய்தது. இவரது வெற்றி சதவீதம் 38.88 ஆக உள்ளது.
கடந்த 2025-ல் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இவரது தலைமையின் கீழ் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இலங்கை பேட்டிங்கின் முக்கிய வீரராக விளங்கும் இவர், இதுவரை 4400-க்கும் மேற்பட்ட டெஸ்ட் ரன்களைக் குவித்துள்ளார். இதில் 13 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 173 ஆகும். நடப்பு 2026-ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 120 ரன்கள் விளாசி அசத்தினார். இவர் பதவி விலகியுள்ள நிலையில், இலங்கையின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

