மத்தவங்க 2 ரன் ஓடுனா டோணி 4 ரன் ஓடுவார்.. விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!
டெல்லி: டோணியின் உடல் தகுதி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்து இருக்கிறார். அதில் டோணி இப்போது முழு பார்மில் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களாக கிரிக்கெட் உலகில் சிலர் டோணி ஓய்வு பெறவேண்டும் என்று கேட்டு வந்தனர். இன்னும் சிலர் டோணி உண்மையாகவே சரியான உடல் தகுதியோடுதான் இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினர்.
தற்போது இந்த அனைத்து கேள்விகளுக்கும் ரவி சாஸ்திரி பதில் அளித்து இருக்கிறார். மேலும் டோணியை தன்னுடைய பாணியில் புகழ்ந்தும் இருக்கிறார்.

டோணி விளையாடுவாரா ?
சமீப காலமாக இந்திய அணியில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் வீரர் டோணி மட்டும்தான். சின்ன தவறு செய்தால் கூட எப்போது இவரை காலி செய்யலாம் என பல முன்னாள் வீரர்கள் அவர் பின் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். விவிஎஸ் லக்ஷ்மன், அகர்கர், சேவாக் என பலர் டோணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கண்டிப்பாக ஆடுவார்
முதலில் அவர் 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. தற்போது அவர் விளையாடுவது மட்டும் உறுதியாகி உள்ளது. ரவி சாஸ்திரி இதுகுறித்து பேசும் போது ''டோணிக்கு அணியில் மாற்றி இல்லை 36 வயது நிரம்பி இருக்கும் அவர் 26 வயது நபரை விட சிறப்பாக விளையாட கூடியவர்'' என்று குறிப்பிட்டார். மேலும் இப்போதுதான் அவர் முழு பார்மில் இருக்கிறார் என்றும் கூறினார்.

நெத்தியடி
மேலும் அவர் முன்னாள் வீரர்களின் கருத்துக்கும் பதில் அளித்தார். அதில் ''ஒருநாள் போட்டியில் தற்போது மிகவும் சிறப்பாக டோணி விளையாடிக் கொண்டு இருக்கிறார். 36 வயதில் யாருமே இவ்வளவு உடல்தகுதியோடு இருந்ததில்லை. அவரை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள், தாங்கள் 36 வயதில் எப்படி இருந்தோம் என்று யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.

திறமையானவர்
டோணியின் உடல் தகுதி குறித்தும் அவர் பேசினார். அதில் ''மற்ற வீரர்கள் அணியின் 2 ரன்கள் ஓடினால், அதே நேரத்தில் டோணி மூன்று ரன்கள் ஓடுகிறார். அவருக்கு மாற்றான ஒரு விக்கெட் கீப்பர் இன்னும் அணியில் இல்லை. டோணியிடம் இருக்கும் திறமை மிகவும் அரிதானது. எளிதில் அப்படி ஒருவரை பார்க்க முடியாது'' என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications