தோனிக்கு முதல்வர் விஜய் நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து.. "உங்களுக்கான விசில் சத்தம் ஒலிக்கட்டும்"
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தோனிக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில், "உங்களது பெயர் ஒலிக்கும் போது எழும் ஒவ்வொரு விசில் சத்தமும், நீங்கள் ஈர்த்துள்ள கோடிக்கணக்கான இதயங்களும், தமிழக விளையாட்டின் உணர்ச்சிகரமான ஒரு முக்கிய அங்கமாக உங்களை மாற்றியுள்ளது. எங்களின் 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது அசாதாரண கிரிக்கெட் சாதனைகளும், அமைதியான தலைமைத்துவமும், எளிமையான குணமும் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. உங்களுக்கு நல்ல உடல்நலமும், மகிழ்ச்சியும், மேலும் பல ஆண்டுகள் வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன். உங்களுக்கான விசில் சத்தம் இன்னும் சத்தமாக ஒலிக்கட்டும்!" என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல், தமிழக மக்களுடன் தோனிக்கு மிக நெருக்கமான உணர்வுபூர்வமான பந்தம் உருவானது. மைதானத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் அமைதியாகச் செயல்பட்டு அணியை வழிநடத்தும் அவரது குணம் தமிழக ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழக ரசிகர்கள் அவரை அன்போடு 'தல' என்று அழைத்து தங்களது வீட்டுப் பிள்ளையாகக் கொண்டாடி வருகின்றனர். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் நமது நாட்டிற்காக தோனி பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றையும் இந்தியா கைப்பற்றியது. உலகளவில் இந்த மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே ஆவார். தோனியின் இந்த வரலாற்றுப் பயணத்தையும், எளிமையையும் பாராட்டி தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

