தோனி சாம்பியன் பாஸ்.. உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார்.. அடித்துச் சொல்கிறார் ஹஸ்ஸி
Recommended Video

டெல்லி : இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோனியின் பொறுமையான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், “இது வெறும் இரண்டு இன்னிங்க்ஸ் தான், இதை பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன்” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் தோனி 37 மற்றும் 42 ரன்கள் எடுத்தார். ஆனால், இந்த ரன்களை சேர்க்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டார். இந்த இரண்டு போட்டிகளிலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 63-ஐ ஒட்டியே இருந்தது.
தோனியோடு சென்னை சூப்பர் கிங்ஸ்-இல் ஆடியவரும், தற்போது அந்த அணியின் பேட்டிங் கோச் ஆக இருப்பவருமான ஹஸ்சி, தோனியின் ஆட்டம் மீது வரும் விமர்சனங்கள் குறித்து பேசினார்.

வெறும் 2 இன்னிங்ஸ்தான்
"இது வெறும் இரண்டு இன்னிங்க்ஸ் மட்டுமே. தோனி எப்படி ஆடுவார் என்பது நமக்கு தெரியும். அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். இறுதியில் ஆட்டத்தை பிடிக்கும் சக்தி அவரிடம் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப அவர் விளையாடி வருகிறார். இதைப் பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். அவர் நீண்ட நாட்களாக விளையாடி வரும் மிகச் சிறந்த வீரர்" என்றார் ஹஸ்சி.

சாம்பியன் வீரரை ஒழித்துவிட முடியாது
மேலும், "வரும் உலகக்கோப்பையில் தோனியின் அனுபவம், முக்கியமாக அவரது கீப்பிங் திறமைகள் மற்றும் இறுதி நேர ஆட்டத்தின் சக்தி, முக்கிய பங்காற்றும். ஒரு சாம்பியன் வீரரை நீங்கள் ஒழித்துக் கட்டிவிட முடியாது" என்றார் அவர்.

கோஹ்லி ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்
இங்கிலாந்தில் விராத் கோலியின் பேட்டிங் செயல்பாடுகள் குறித்து வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய போது, "விராத் எப்படி ஆடுகிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவர் நிச்சயம் அதிக ரன்கள் குவிப்பார். அவர் ஒருமுறை நம்பிக்கை அடைந்துவிட்டால் அவரை நிறுத்துவது கடினம். இங்கிலாந்தில் அவரது செயல்பாடுகள் குறித்து அதிகமாக பேசப்படுகிறது" என்றார்.

அஸ்வினா.. குல்தீப்பா
அடுத்து நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் அஸ்வின் அல்லது குல்தீப், இருவரில் யாரை பயன்படுத்தலாம் என்ற குழப்பம் பற்றி கூறுகையில், "அஸ்வின் நீண்ட நாட்களாக டெஸ்ட் விளையாடி வருகிறார். ஒருவேளை அவர் உடற்தகுதி பெறாமல் இருந்தால், குல்தீப்பை பயன்படுத்தலாம். அவரும் நன்றாகவே செயல்படுவார்" என்றார்.


Click it and Unblock the Notifications