தோல்வி-குடித்து கொண்டாடிய டோணி அன் கோ!

ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த மிகப் பரபரப்பான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
அன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புயலாக ஆடி 175 ரன்களை விளாசினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் இந்தியா வென்று விடும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இதயம் பட படக்க போட்டியைப் பார்த்தனர். ஆனால் இந்தியாவின் தோல்வி அவர்களை நொறுங்கிப் போகச் செய்தது.
இந்தத் தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான பழம்பெரும் பத்திரிக்கையாளரான பிரபாஸ் ஜோஷி மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆனால் இப்படியெல்லாம் ஒருபக்கம் சோகங்கள் உலவிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது கேப்டன் டோணி தலைமையில், தோல்வி குறித்து கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் பார்ட்டியில் கலந்து கொண்டு குடித்துக் கொண்டாட்டமாக இருந்துள்ளனராம்.
இதுகுறித்து சேனல் நியூஸ் எக்ஸ் என்ற தனியார் தொலைக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் டோணியும், வீரர்கள் சிலரும் ஜாலியாக இருப்பது போல உள்ளது.
அவர்களுடன் ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் உள்ளனர்.
டோணியுடன் வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நேஹ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காணப்புடகின்றனர்.
குடி, கொண்டாட்டம், ஆட்டம், பாட்டமாக அந்த விருந்து நடந்ததாம்.
இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து முன்னாள் மும்பை கிரிக்கெட் வீரர் ராம்ஜி தரோத் கூறுகையில் இந்தப் படங்கள் உண்மையானவை என்றால் அது மிகவும் சோகமானது. ஒரு கேப்டனுக்கு இப்படிப்பட்ட புகைப்படங்கள் நல்ல பெயரை வாங்கித் தராது என்றார் அவர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications