நாடு திரும்பியது இந்திய கிரிக்கெட் அணி- மும்பையில் உற்சாக வரவேற்பு
மும்பை:
20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று, வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியினருக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து வாங்கடே ஸ்டேடியம் வரை வீரர்கள் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். வழியெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. வெற்றிக் கோப்பையுடன் இன்று காலை இந்திய கிரிக்கெட் அணி மும்பை திரும்பியது.
விமான நிலையத்தில் இந்திய அணியினருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார், துணைத் தலைவர் லலித் மோடி, செயலாளர் நிரஞ்சன் ஷா, தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் உள்ளிட்டோர் வீரர்களை வரவேற்றனர்.
விமான நிலைய வளாகத்தில் பெரும் திரளான ரசிகர்கள் கூடியிருந்து கிரிக்கெட் வீரர்களை பார்க்க காத்திருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மிகுந்த சிரமத்திற்கிடையே வீரர்களை விமான நிலையத்திற்கு வெளியே போலீஸார் அழைத்து வந்தனர்.
அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த மாடிப் பேருந்தில் வீரர்கள் ஏறிக் கொண்டனர். திறந்த வெளிப் பேருந்தான அதிலிருந்தபடி ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தபடியும், டான்ஸ் ஆடியபடியும் வீரர்கள் உற்சாகமாக சென்றனர்.
நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலம் தொடங்கியது. காலையிலிருந்து மும்பையில் பெய்து கொண்டிருக்கும் லேசான மழையையும் பொருட்படுத்தாமல் பெரும் திரளான ரசிகர்கள் இரு புற சாலைகளிலும் கூடி நின்று வீரர்களை நோக்கி கையைசத்து வாழ்த்தி, வரவேற்றனர்.
யுவராஜ்சிங், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா, திணேஷ் கார்த்திக் ஆகியோர் டான்ஸ் ஆடியபடி பேருந்தில் வந்தனர்.
விமான நிலையத்திலிருந்து வாங்கடே ஸ்டேடியம் 30 கிலோமீட்டர் தொைலவில் உள்ளது. பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு இடையே பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
வாங்கடே ஸ்டேடியத்தில் வீரர்களுக்குப் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகையை கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார் அளிக்கிறார். ஒவ்வொரு வீரருக்கும் சுமார் ரூ. 80 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications