இந்திய அணியின் புதிய கேப்டன் டோணி!
மும்பை:
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் சமீபத்தில் ராஜினாமா செய்தார். தேர்வுக் குழுத் தலைவர் வெங் சர்க்காரின் போக்கால்தான் டிராவிட் விலகியதாக கூறப்படுகிறது. அதேசமயம், தன்னால் சுதந்திரமாக செயல்படவில்லை என்று டிராவிட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அடுத்து இந்தியா பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு புதிய கேப்டனைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் இன்று வெங்சர்க்கார் தலைமையில் நடந்தது.
முதலில் சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்திருந்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார் மற்றும் வெங் சர்க்கார் ஆகியோர் சச்சினிடம் பேசினர்.
ஆனால் சச்சின் கேப்டன் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுடனான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக டோணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் தொடருக்கான ஒரு நாள் அணிக்கு டோணி கேப்டனாக இருப்பார்.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்களுக்கான இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியன் கேப்டனாக டோணி செயல்படுவார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். டோணி சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்றார்.
இன்றைய கூட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இர்பான் பதான், ஹர்பஜன்சிங் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
யுவராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அஜீத் அகர்கர், முனாப் படேல், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் இடமில்லை.
இந்திய அணி விவரம்:
டோணி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், திணேஷ் கார்த்திக், கெளதம் காம்பீர், ராபின் உத்தப்பா, இர்பான் பதான், ரமேஷ் பவார், பையூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங், ஜாகிர் கான், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்.
டோணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள 20-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அவர் இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications