இதெல்லாம் ரொம்ப தப்பு.. கொந்தளித்த தோனி.. 2019 ஐபிஎல் சர்ச்சை குறித்து சிஎஸ்கே வீரர் கோபால் பேச்சு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆடுகளத்துக்கு வந்தாலே விண்ணை எட்டும் அளவுக்கு கோஷம் எழும். ஆனால், ஒருமுறை அவர் ஆடுகளத்துக்குள் நுழைந்த போது மயான அமைதி நிலவியதை பற்றி சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருக்கும் சுழற பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் சமீபத்தில் பேசி இருக்கிறார்.
2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஏற்பட்ட 'நோ-பால்' சர்ச்சையின் போது தான் அது நிகழ்ந்தது. அந்தச் சம்பவத்தின்போது ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் கோபால், அந்தத் திக்திக் நிமிடங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில், சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தை, மிட்செல் சான்ட்னர் எதிர்கொண்டார். அது இடுப்புக்கு மேல் சென்ற உயரமான 'ஃபுல் டாஸ்' பந்தாக இருந்தது.

கள நடுவர் முதலில் அதனை 'நோ-பால்' என்று அறிவிக்க தனது கையை உயர்த்தினார். ஆனால், லெக் அம்பயருடன் கலந்தாலோசித்த பிறகு, தனது முடிவை மாற்றிக்கொண்டு அது சரியான பந்துதான் என்று அறிவித்தார். நடுவரின் இந்த திடீர் முடிவு, சிஎஸ்கே அணியின் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த கேப்டன் தோனிக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
தனது இயல்புக்கு மாறாக, ஆக்ரோஷமாக மைதானத்திற்குள் நுழைந்த அவர், நடுவர்களுடன் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. களத்தில் தோனியின் இந்தச் செயல்பாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, தோனிக்கு அவரது போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மயான அமைதி நிலவியது
தற்போது சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரேயாஸ் கோபால், அந்தச் சம்பவம் குறித்து சிஎஸ்கே-வின் யூடியூப் சேனலில் பேசுகையில், தோனி களத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட சூழலை விவரித்தார். "நான் அப்போது ஃபைன்-லெக் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அவர் என்னைக் கடந்துதான் சென்றார். ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகிறது என்பதை நான் உணர்ந்தேன்."
"உலகின் மிக அமைதியான மற்றும் நிதானமான கிரிக்கெட் வீரராகக் கருதப்படும் அவரே களத்திற்குள் வருகிறார் என்றால், நிச்சயமாக அவரை மிகவும் பாதித்த அல்லது தவறான ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் கவனித்தீர்களானால், ஒருவேளை மகி பாய் களத்திற்குள் நுழைந்த அந்த ஒரு தருணத்தில் மட்டும்தான், அங்கே முழுமையான மயான அமைதி நிலவியது. யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் களத்திற்குள் நடந்து வந்தபோது, அனைவரும் அமைதியாக இருந்ததை நான் அப்போதுதான் பார்த்தேன்" என்று கோபால் கூறினார்.
லெக்-ஸ்பின்னரான ஸ்ரேயாஸ் கோபாலை, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி அவரது அடிப்படை விலையான ₹30 லட்சத்திற்கு வாங்கியது. இருப்பினும், இந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் கடைசியாக 2024-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.


Click it and Unblock the Notifications