VIDEO: வாட்சன், தாஹிர் மகன்களுடன் ரேஸ் ஓடிய தல தோனி... சேப்பாக்கத்தில் ஒரு குதூகலம்
சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி சக வீரர்களின் குழந்தைகளுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணியில், தொடக்க வீரர் வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்பாக ஆடிய டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார். கடைசி கட்டத்தில், தோனி மற்றும் அம்பத்தி ராயுடு சற்று அதிரடியாக ஆடியதால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

அரைசதம் அடித்த வீரர்கள்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். எனினும் அந்த அணியின் ராகுல், சர்பராஷ் கான் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர்.

சென்னை சூப்பர் வெற்றி
இருப்பினும் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப்பிடித்தது.

ஓட்டப்பந்தயத்துக்கு தயார்
பஞ்சாப் அணியுடனான போட்டி நிறைவு பெற்ற பின், சென்னை அணியின் வாட்சன் மற்றும் இம்ரான் தாஹிரின் மகன்கள் மைதானத்தில் விளையாடிய போது ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகினர். இதனை பின்னால் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் தோனி.
தோனி கலக்கல்
பின்னர், சிறுவர்களுக்கு முன்னதாக பந்தயத்தை தொடங்கி ஓட ஆரம்பித்தார். அவர்களுடன் சிறிது தூரம் ஓடிய தோனி, தாஹிரின் மகனை தூக்கிகொண்டு திரும்பி ஓடிவந்து எல்லையை அடைந்தார். வாட்சன் மகன் திரும்பி ஓடிவரும் வரை அங்கு நின்ற தோனி, அந்த சிறுவன் வந்த உடன் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.


Click it and Unblock the Notifications