ராணுவ பயிற்சி ஓவர்..! ஓய்வா? இல்ல ஆட்டமா? செம டுவிஸ்ட் தரும் தோனியின் அதிரடி பிளான்..!
டெல்லி: 2 வார ராணுவ பயிற்சியை அசால்ட்டாக முடித்த தோனி தமது அடுத்தக் கட்ட முடிவை பற்றி விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தல தோனி. முன்னாள் கேப்டனான தோனி, ராணுவத் தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ராணுவ பயிற்சி என்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டார். இதையடுத்து அவருக்கு பிசிசிஐ அனுமதி அளித்தது. ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றார்.

2 வார பயிற்சி
பின்னர் விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். கடந்த 31ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு பணியாற்றிய தோனிக்கு ஆயுதங்களை கையாளுவது பற்றியும் கற்று கொடுக்கப்பட்டது. பயிற்சியின்போது சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் தோனி உற்சாகமாக கொண்டாடினார்.
அங்கும் கிரிக்கெட்
தோனி ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் சில சிறுவர்களுடன் ராணுவ உடையில் கிரிக்கெட் ஆடும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது. கூடைப் பந்து மைதானத்தில் தோனி ராணுவ சீருடையில் விளையாடும் போட்டோவை சிஎஸ்கே அணி நிர்வாகம், டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அது செம வைரலாகி வருகிறது.

கலக்கல் போட்டோ
ராணுவப்பணி முடிவடைந்த நிலையில், லே விமான நிலையத்தில் இருந்து தமது சொந்த ஊருக்கு தோனி திரும்பினார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ஏக பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

தோனியின் முடிவு
ராணுவ பயிற்சிக்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இருப்பாரா மாட்டாரா என்பது படு சஸ்பென்சாக போய் கொண்டிருந்தது. ஆனால், அதற்கு எல்லாம் அசராத தோனி ராணுவ பயிற்சிக்கு சென்றுவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கும் முன்னரே தம்மை விடுவித்துக்கொண்டார் தோனி.

நாடு திரும்பினார்
இந்தியாவோ, வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்க, தோனியோ எல்லைப்பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். பாராசூட் ரெஜிமெண்ட், ரோந்து என்று தோனியின் 2 வார கால ராணுவ பயிற்சி முடிந்துவிட்டது. சொந்த ஊரும் திரும்பிவிட்டார்.

அதிரடி திட்டம்?
இனி அவரது திட்டம் என்னவாக இருக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணி தென்ஆப்ரிக்க அணியுடனான தொடரில் விளையாடுகிறது. நிச்சயம் அந்த தொடருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்து கொண்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆக மொத்தத்தில் தோனியின் ஓய்வு என்பது இப்போதைக்கு கிடையாது என்பது தான் நிதர்சனம்.


Click it and Unblock the Notifications