பெண் குழந்தைக்குத் தந்தையான டோணி... ஆஸி. பயிற்சியில் உள்ளதால் பார்க்க வரவில்லை
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணி பெண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.
உலகக்கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள டோணி, தனது செல்ல மகளை உடனே நேரில் பார்க்க வரமுடியாத சூழ்நிலையிலும் தனது குழுவினருக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்.
கேப்டன் டோணிக்கும், தனது சிறுவயது தோழி சாக்ஷியை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உலகில் எங்கு கிரிக்கெட் நடந்தாலும் கணவரின் ஆட்டத்தை காண சாக்ஷி தவறாமல் ஆஜராகி விடுவார். கேலரியில் அமர்ந்து கணவரை உற்சாகப்படுத்துவார்.

சாக்ஷி கர்ப்பம்
இந்த நிலையில் சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாகவே ஓய்வில் இருந்தார் சாக்ஷி. பிரசவ தேதி நெருங்கியதை அடுத்து டோணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதை தவிர்த்து விட்டார்.

பெண் குழந்தை
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாக்ஷிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. டெல்லி அருகே உள்ள குர்கானில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாக்ஷிக்கு நேற்று மாலை அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டோணி -சாக்ஷி தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும்.

டோணி பிசி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோணி இப்போது ஆஸ்திரேலியாவில் ‘பிசி'யாக இருக்கிறார். உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்வீட் எடு கொண்டாடு
இப்போதைக்கு டோணி தனது செல்லமகளை நேரில் பார்க்க முடியாத சூழலில் இருக்கிறார். ஆனாலும் தந்தை ஆன தகவல் அறிந்ததும் பூரித்து போன அவர் சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

குவியும் வாழ்த்துக்கள்
கேப்டன் டோணிக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி, டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்த அற்புதமான செய்திக்காக வாழ்த்துக்கள் டோணி சகோதரா... உங்க மூன்று பேரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

அனில் கும்ளே, அபிஷேக் பச்சன்
அதுபோல் அனில் கும்ப்ளே, ஹர்ஷா போக்லே, அபிசேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் டோணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேசம்தான் முக்கியம்
குழந்தையை பார்க்க இந்தியா திரும்பப் போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உலகக் கோப்பை முக்கியமான ஒரு போட்டி ஆகும். முதலில் தேசத்திற்காக விளையாடுவதுதான் முக்கியம். பொறுத்திருந்து குழந்தையை பார்ப்பேன்' என்று டோணி பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications