2வது உலகக் கோப்பையைப் பெற ஒரே ஒரு வெற்றிக்கு காத்திருக்கும் டோணி அன் கோ
மும்பை: இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பாக்கி. கிரிக்கெட் உலகின் உச்சிக்கு மீண்டும் இந்தியாவைக் கொண்டு செல்ல முடியும் என்பதால், டோணி தலைமையிலான இந்திய அணி பெரும் ஆவலுடன் வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழையக் காத்திருக்கிறது.

1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை, அதன் பிறகு ஒரு முறை வெல்வதற்கான வாய்ப்பு கை கூடி வந்தபோதும் கூட அதை நழுவ விட்டு விட்டது இந்தியா. இந்த நிலையில் தற்போது 2வது முறையாக, மொத்ததில் 3வது முறையாக அந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பாக்கி. அது மட்டும் கிடைத்து விட்டால் டோணியும் அவரது சிஷ்யர்களும் உலகத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். இந்தியாவோ இரண்டாவது முறையாக தனது கிரிக்கெட் பிள்ளைகளை உச்சி மோர்ந்து வாழ்த்த தயாராகும்.
நாளைய போட்டியில் இந்தியா பெரும் தன்னம்பிக்கையுடன் இலங்கையை சந்திக்கவுள்ளது. அரை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த பாகிஸ்தானை தனது பவுலிங்கால் அடித்து நொறுக்கிய இந்தியாவின் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவும் கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்து குஷியடைந்தது.
இந்த நிலையில் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற பெரும் நம்பிக்கை நாடு முழுவதும் வியாபித்துக் கிடக்கிறது. மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மிகச் சிறந்த பெருமையாக இந்த வெற்றி அமையும் என்ற நம்பிக்கையும் இந்தியர்களிடம் உள்ளது.
கபில் தேவ் படைத்த சாதனைக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு நாள் போட்டியில் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இருப்பினும் டுவென்டி 20 உலகக் கோப்பையை டோணி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று வந்தது ஆறுதலைக் கொடுத்தது.
அதேசமயம், டோணி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் தவிப்பைத் தணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. கபில்தேவ், கங்குலிக்குப் பின்னர் சிறந்த கேப்டனாக திகழ்கிறார் டோணி. அவர் எள் என்றால் எண்ணெயாக நிற்கிறார்கள் அவரது வீரர்கள். எனவே இந்த முறை உலகக் கோப்பையை கண்டிப்பாக தட்டிச் செல்லும் இந்தியா என்பது டோணி ஆதரவாளர்களின் கருத்து.
நாளைய போட்டியில், லேசான மாற்றம் இருக்கும். ஆசிஷ் நெஹ்ராவுக்குக் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் ஆட மாட்டார் என கேப்டன் டோணி அறிவித்துள்ளார். அவருக்குப் பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
நாளைய போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் செல்ல இந்திய வீரர்கள் மும்முரமாக உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications