
சிஎஸ்கே பயிற்சி
2020 ஐபிஎல் தொடருக்கு மற்ற அணிகள் நிதானமாக தயாராகி வந்த நிலையில், சிஎஸ்கே அணி மட்டும் முன் கூட்டியே பயிற்சி செய்யத் திட்டமிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஒரு வாரம் முன்னதாக செல்ல முயன்றது. ஆனால், பிசிசிஐ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

சென்னையில் பயிற்சி முகாம்
இந்த நிலையில், சென்னையில் ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்தியது சிஎஸ்கே அணி. மற்ற அணிகள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்ந்தன. சிஎஸ்கே அணியும் ஆகஸ்ட் 21 அன்று துபாய் சென்றது. அங்கே ஹோட்டலில் ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்தது.

13 பேருக்கு பாதிப்பு
சென்னையில் பல முறை சிஎஸ்கே அணியினருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், யாருக்கும் அப்போது பாதிப்பு இல்லை. ஆனால், துபாய் சென்ற பின் இரண்டு வீரர்கள் மற்றும் 11 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பயத்தில் ரெய்னா
இது சிஎஸ்கே அணியை கலக்கமடையச் செய்துள்ள நிலையில், சுரேஷ் ரெய்னா பயத்தில் ஆழ்ந்துள்ளார். தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் என்ற இரு வீரர்களுக்கு பாதிப்பு இருந்தது. அதில், தீபக் சாஹருடன் பயிற்சியின் போது நெருக்கமாக இருந்துள்ளார் ரெய்னா.

வெள்ளி இரவு
இது குறித்து, கட்டுப்பாடுகளுடன் இருந்தும் சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி அணி நிர்வாகத்திடம் தன் பயத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரெய்னா. வெள்ளி இரவு அன்று அவர் கடும் பயத்தில் இருந்துள்ளார்.

இங்கே இருக்க முடியாது
பாதுகாப்பு வளையத்துக்குள் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் இனி தன்னால் இங்கே இருக்க முடியாது என அவர் கூறி உள்ளார். வெள்ளி இரவு அன்று சக வீரர்கள், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் கேப்டன் தோனிக்கு அவர் தொடர்ந்து தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

கேப்டன் தோனி விளக்கம்
அப்போது ரெய்னா பதற்றமாகவும், கவலையுடன் பேசி உள்ளார். கேப்டன் தோனி கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சிலருக்கு இருந்தாலும் அதை எப்படி அணுகி, அதில் இருந்து வெளியேறுவது என்பது பற்றி ரெய்னாவுக்கு விளக்கி உள்ளார்.

கேட்கும் மனநிலையில் இல்லை
ஆனாலும், ரெய்னா அதை கேட்கும் மனநிலையில் இல்லை. எவ்வளவு சமாதானம் செய்தும் ரெய்னா அமைதியடயாத நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரது விருப்பப்படி இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்து அதை ட்விட்டரில் அறிவித்தது.

சக வீரர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே, அணிக்குள் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பீதியில் இருந்த சக வீரர்களுக்கு இந்த செய்தி மேலும் அதிர்ச்சி அடைய வைத்தது. காரணம், சிஎஸ்கே அணியில் தோனிக்கு பின் சுரேஷ் ரெய்னா தான் தலைமைப் பொறுப்பில் உள்ள வீரர்.

கடினமான நேரத்தில்..
நீண்ட நாட்களாக சிஎஸ்கே அணியில் இருப்பவர். ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் ஆடியவர். அணியின் துணை கேப்டன் என இத்தனை அடையாளங்கள் உள்ள வீரரே கடினமான நேரத்தில் அணியை விட்டு சென்றதால் சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிஎஸ்கே அணி ரெய்னாவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications