கொல்கத்தா: கொல்கத்தா வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி, அங்குள்ள போலீஸ் தலைமையகத்திற்குச் சென்று பழைய பைக்குகளைப் பார்வையிட்டார். ஒரு பழைய யமஹா பைக்கை ஓட்டியும் பார்த்தார்.
தென் ஆப்பிரிக்காவுடனான 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் கொல்கத்தா வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென கேப்டன் டோணி, லால்பஜாரில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்குச் சென்றார். அங்கு ஏராளமான பழைய பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருட்டு வழக்குகளில் பிடிபட்டவை, அனாதையாக கிடந்தவை என்று ஏகப்பட்ட பைக்குகள் அங்கு உள்ளன. டோணி ஒரு டூவீலர் பிரியர் ஆவார். பல வகையான மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக பாசம் கொண்டவர். படு வேகமாக டிரைவ் செய்வதிலும் வல்லவர்.
அந்த வகையில் ஏகப்பட்ட பைக்குகள் அங்கு இருப்பதை அறிந்து லால்பஜார் சென்றார் டோணி. அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களிடம் பழைய பைக்குகளைப் பார்வையிட வேண்டும் என்று டோணி கூறவே அவர்களும் பைக்குகளைக் காட்டினர்.
அப்போது அங்கிருந்த 70களில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த யமஹா 350 ரக பைக் ஒன்றை அங்கேயே ஓட்டிப் பார்த்தார் டோணி.
கொஞ்ச நேரம் லால் பஜாருக்குள் ரவுண்ட் அடித்த டோணி பின்னர் அங்கிருந்து திரும்பினார்.
அவர் பழைய பைக் எதையும் வாங்க வந்தாரா அல்லது 'விண்டோ ஷாப்பிங்' போல பழைய பைக்குகளைப் பார்த்துச் செல்ல வந்தாரா என்பது குறித்து யாரும் விளக்கவில்லை.