ஒரு நியாயம் வேணாமா.. ஜாம்பவான் தோனி vs குட்டிப் பையன் வைபவ் சூர்யவன்ஷி.. தெறிக்கும் ஐபிஎல் விளம்பரம்
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், தோனி மற்றும் வைபவ் சூர்யவன்ஷியை வைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், சிலர் இந்த விளம்பரத்தை விமர்சித்தும் வருகின்றனர்.
வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இளம் வீரராக இருக்கிறார். அவரது வயது 14. அதேபோல, இந்த ஆண்டு மிக அதிக வயதுடைய வீரராக இருக்கும் தோனியின் வயது 43. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோத உள்ளன.

இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்தச் சூழலில், போட்டியை சுவாரஸ்யப்படுத்த வேறு எந்த விஷயமும் இல்லாததால், தோனி மற்றும் வைபவ் சூர்யவன்ஷியை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த விளம்பரப் படத்தில், தோனி ஒரு ஃபினிஷர் ஆக எப்படிச் செயல்பட்டிருக்கிறார் என்பதையும், வைபவ் சூர்யவன்ஷி ஒரு துவக்க வீரராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார் என்பதையும் ஒப்பிட்டு இருக்கிறார்கள். தோனி ஒரு ஃபினிஷராக 177 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியிருப்பதையும், நான்கு பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடித்திருப்பதையும் ஒருபுறம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
மறுபுறம், வைபவ் சூர்யவன்ஷி துவக்க வீரராக 211 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் இதுவரை ரன்கள் குவித்திருப்பதாகவும், மூன்று பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடிப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு இந்த விளம்பரப் படம் வெளியாகி உள்ளது.
தோனி இந்த ஆண்டு பெரிய அளவில் பேட்டிங் செய்யாத நிலையில், இந்த ஒப்பீடு தேவையற்றது என சிலர் விமர்சித்து உள்ளனர். மேலும், சிலர் இது வைபவ் சூர்யவன்ஷிக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிஎஸ்கே உடனான இந்த லீக் போட்டியே இந்த ஆண்டின் கடைசிப் போட்டியாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஆடிய பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மற்றொரு போட்டியில் விளையாட உள்ளது.


Click it and Unblock the Notifications