மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேத பந்துவீச்சாளர் முகமது ஷமி அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணுக்கள் காயத்தை குணப்படுத்திக் கொண்டு, உடற் தகுதியை மீட்க பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
தற்போது அவர் வலைப் பயிற்சியில் ஈடுபடத் துவங்கி இருக்கிறார். அவர் முதலில் வேகப் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தீவிரமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததால் தான் அவர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என சுட்டிக்காட்டி வருகின்றனர். முகமது ஷமி டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு ரன் சேர்ப்பார். ஆனால், அவரை ஒரு அல் - ரவுண்டராக நம்ப முடியாது. சில நாட்கள் முன்பு நடந்து முடிந்த இலங்கை சுற்றுப் பயண தொடர்களில் கவுதம் கம்பீர் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் அனைத்து வீரர்களும் ஆல் ரவுண்டர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஏழு பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஐந்து முழு நேர பந்துவீச்சாளர்களுடன், இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதேபோல, ஒரு நாள் தொடரிலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் பகுதி நேரமாக பந்து வீசினர். இதை தவிர்த்து இரண்டு ஆல் ரவுண்டர்களும் அணியில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் பேட்டிங் வரிசையில் எட்டு வீரர்கள் வரை இருந்தனர்.
இதுதான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வலியுறுத்தி வருவதால் அனைத்து இந்திய வீரர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் முகமது ஷமி பேட்டிங் பயிற்சி செய்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முகமது ஷமி கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை முடிந்த பின் தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் அதிலிருந்து மீண்டு வரும் பயிற்சிகளை மேற்கொண்டார். தற்போது அவர் உடற் தகுதியை பெற்றிருக்கும் நிலையில், போட்டிகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் பேட்டிங்கிற்கு ஏன் அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணி நிர்வாகம் அல்லது தேர்வுக் குழுவினர் கூறியதால் தான் முகமது ஷமி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டாரா? இதன் பின்னணியில் கவுதம் கம்பீர் இருக்கிறாரா? என்ற சந்தேகமும் உள்ளது.