கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இலங்கை அணி வீரர்களை ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் ஆடிய ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களும், கேஎல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷன் 33 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது இஷான் கிஷன் இலங்கை அணி வீரர்களை ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்ததாக இலங்கை ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இந்திய அணியின் கேஎல் ராகுல் - இஷான் கிஷன் இருவரும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர்.
இவர்கள் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இந்த நிலையில் 25வது ஓவரை இலங்கை அணியின் தனஞ்செயா வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் இஷான் கிஷன் ட்ரைவ் ஆட முயற்சித்தார். அந்த பந்து அருகில் நின்றிருந்த சமரவிக்ரமா கைகளுக்கு சென்றது. இதனால் இஷான் கிஷன் க்ரீஸில் இருந்து கூட வெளிவரவில்லை.
ஆனால் சமரவிக்ரமா இஷான் கிஷனை ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பரிடம் பந்தை வீசினார். ஆனால் அந்த பந்து நேராக இஷான் கிஷனை நோக்கி செல்ல, திடீரென இஷான் கிஷன் பந்தை கேட்ச் பிடித்து பவுலரிடம் வீசினார். இதனை உணர்ந்த இலங்கை அணியின் சமரவிக்ரமா, உடனடியாக இஷான் கிஷனிடம் மன்னிப்பு கோரினார்.
https://twitter.com/rolex9p/status/1701678983023104203
ஆனால் இந்த விவகாரத்தை இலங்கை ரசிகர்கள், இஷான் கிஷன் ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததார் சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பெரிய இதயம் கொண்ட இலங்கை வீரர்கள் நடுவர்களிடம் அப்பீல் செய்யாததால் இஷான் கிஷன் தப்பித்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையறிந்த இந்திய ரசிகர்கள் இலங்கை ரசிகர்களுக்கு வீடியோ மூலமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.