குழந்தையை கூட பார்க்கல.. நடராஜனுக்கு ஒரு விதி.. கோலிக்கு ஒரு விதியா? கவாஸ்கர் பேச்சால் பரபரப்பு!
டெல்லி: இந்திய அணியில் அஸ்வினுக்கும் நடராஜனுக்கும் ஒரு விதி இருக்கிறது, கோலிக்கு ஒரு விதி இருக்கிறது என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்காக தற்போது கோலி விடுமுறை எடுத்துவிட்டு.. இந்தியா திரும்பி உள்ளார்.
கோலியின் இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிய கோலி மொத்தமாக இந்தியா திரும்பி உள்ளார்.

இந்தியா திரும்பினார்
இந்த நிலையில் கோலியின் இந்த முடிவை முன்னாள் வீரர் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார். அதில், இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. வீரர்களுக்கு இடையில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்திய அணியில் அஸ்வின் தொடர்ந்து ஓரம்கட்டப்படுகிறார்.

நேர்மை
அஸ்வின் நேர்மையாக பேசுகிறார், வெளிப்படையாக தனது மனதில் இருப்பதை சொல்கிறார் என்பதால் கோலி அவரை ஓரம்கட்டிவிட்டார். இது போக நடராஜனுக்கு ஐபிஎல் தொடரின் போதுதான் குழந்தை பிறந்தது. ஆனால் அவரால் தனது குழந்தையை பார்க்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா
ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட அவர் தனது குழந்தையை பார்க்காமல் துபாயில் இருந்து அப்படியே ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். ஆஸ்திரேலியாவில் தற்போது நடராஜன் இந்திய அணியில் கூட இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியின் நெட் பவுலராக மட்டுமே நடராஜன் உள்ளார்.

நடராஜன்
இப்படிப்பட்ட நிலையில் அவர் வரும் ஜனவரி இறுதியில்தான் தனது குழந்தையின் முகத்தை முதல் முறையாக பார்க்க முடியும். ஆனால் கோலி இந்திய அணியில் இடம்பெற்று இருந்தும் கூட பாதி தொடரில் வெளியேறுகிறார். இது எந்த விதத்தில் நியாயம். பிறக்காத குழந்தையை பார்க்க கோலிக்கு விடுப்பு கொடுக்கப்படுகிறது.

விடுப்பு
ஆனால் நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நடராஜன், அஸ்வினை கேளுங்கள்.. அவர்களே சொல்வார்கள் இந்திய அணியில் இருக்கும் பாரபட்சம் பற்றி. கோலிக்கு மட்டும் கூடுதல் உரிமை அணியில் கொடுக்கப்படுகிறது என்று கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications