இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி கேப்டன் தில்ஷன்: இலங்கை கிரிக்கெட் வாரியம்

மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததையடுத்து அணியின் கேப்டன் சங்ககாராவும், துணை கேப்டன் ஜெயவர்த்தனேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு தில்ஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அது 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டுவென்டி 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மே மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்த மூன்று வகைப் போட்டிகளுக்குமே தில்ஷன் தான் கேப்டனாக இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
துணை கேப்டன் பதவிக்கு உகந்த வீரர்கள் காயமடைந்திருப்பதால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தில்ஷன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அவர் நாடு திரும்பியதும் இங்கிலாந்து செல்லும் அணி தேர்வு செய்யப்படும் என்று
தேர்வு குழு சேர்மன் துலீப் மென்டிஸ் தெரிவித்தார்.
இலங்கை விளையாட்டு அமைச்சகம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களை மே மாதம் 5-ம் தேதிக்குள் நாடு திரும்புமாறு தெரிவித்துள்ளது. தில்ஷன் உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்று பெருமை பெற்றார்.
34 வயதான தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி கேப்டனாக இருந்தார். ஒரு நாள் தொடர் கேப்டனாகவும் இருந்த அவர் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தது இல்லை.
தில்ஷன் 66 டெஸ்டில் விளையாடி 11 சதம், 16 அரை சதங்களுடன் 3990 ரன்களும், 203 ஒருநாள் போட்டியில் ஆடி 10 சதம் 22 அரை சதத்துடன் 5456 ரன்களும், 20 ஓவர் போட்டியில் 32 ஆட்டங்களில் விளையாடி 5 அரை சதத்துடன் 758 ரன்களும் எடுத்துள்ளார்.
Story first published: Thursday, June 7, 2012, 10:53 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications