திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி சொந்த மண்ணில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் திண்டுக்கல் அணியை எதிர்த்து மதுரை அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மதுரை அணி சார்பாக களமிறங்கிய கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து கேப்டன் ஹரி நிஷார்ந்த் - கவுசிக் இணை நிதானமாக ஆடியது.

2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் ஹரி நிஷாந்த் 26 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து கவுசிக் 45 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் வகுத்த வியூகத்தில் மதுரை அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் மதுரை அணி 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. திண்டுக்கல் அணி தரப்பில் சரவண குமார் மற்றும் சுபோத் பாட்டி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஷிவம் சிங் 9 ரன்களிலும், விமல் குமார் 6 ரன்களிலும், அருண் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திண்டுக்கல் அணி தடுமாறியது. இதையடுத்து இணைந்த பாபா இந்திரஜித் - ஆதித்யா கணேஷ் கூட்டணி விக்கெட்டை இழக்காமல் கவனமாக ஆடியது. ஒருபக்கம் கணேஷ் நிதானமாக விளையாட, இன்னொரு பக்கம் இந்திரஜித் வெளுத்து வாங்கினார். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் வீசிய 12வது ஓவரில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரியை விளாசி ஒரே ஓவரில் திண்டுக்கல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியாக திண்டுக்கல் அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக ஆடிய பாபா இந்திரஜித் 48 பந்துகளில் 78 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து திண்டுக்கல் அணி அசத்தியுள்ளது.