சேலம்: திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஆதித்யா கணேஷ் அடித்த அபார அரைசதத்தால் திண்டுக்கல் அணி அசத்தலான வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 20வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் மோதின. திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் துலீப் டிராபியில் பங்கேற்க உள்ளதால், அந்த அணிக்கு பாபா இந்திரஜித் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் திடீரென மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் ரஹேஜா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சாய் கிஷோர் - விஜய் சங்கர் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். சாய் கிஷோர் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அனிருத் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய விஜய் சங்கர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. இதனால் 174 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அதில் பெரியசாமி வீசிய முதல் ஓவரிலேயே 18 ரன்கள் விளாசப்பட்ட, திண்டுக்கல் அணியின் அதிரடி எங்குமே நிற்கவில்லை. ஒரு பக்கம் விமர் மற்றும் பூபதி தலா 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் தொடக்க வீரர் சிவம் சிங் நிதானமாக ஒரு பக்கம் ஆட, இன்னொரு பக்கம் வந்த ஆதித்யா கணேஷ் பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது ஒரு பவுண்டரி விளாச வேண்டும் என்று ஆடினார். இதன் பலமான திண்டுக்கல் அணி 11வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய சிவம் சிங் அரைசதம் அடிக்க, அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
18 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 161 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரு சிக்சர்களை விளாசி ஆதித்யா கணேஷ் திண்டுக்கல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். சிறப்பாக ஆடிய அவர், 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணி பெற்றுள்ள 4வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.