ரிஷப் பண்ட்-ஐ தாண்டி தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் போலையே!!
கொல்கத்தா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற உள்ள டி20 தொடர் இன்று முதல் துவங்க உள்ளது.
முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், விக்கெட் கீப்பர் என ரிஷப் பண்ட் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால், தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.

ரோஹித் சர்மா கேப்டன்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 எனவும், ஒருநாள் போட்டித் தொடரை 3-1 எனவும் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் தோனி, கோலி உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இடம் பெறவில்லை. தோனி இனி டி20 போட்டிகளில் இடம் பெறமாட்டார் என்றே தெரிகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு மட்டும் இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

அடுத்த விக்கெட் கீப்பர் யார்?
தோனி நீக்கப்பட்டதற்கு காரணம், இந்திய டி20 அணிக்கு அடுத்த விக்கெட் கீப்பரை அடையாளம் காணவே என கூறப்பட்டது. ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இருவரில் யார் இந்திய டி20 விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ரிஷப் பண்ட் ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் இடத்தை தினேஷ் கார்த்திக் இடம் இருந்து தட்டிப் பறித்து விட்டார்.

விக்கெட் கீப்பர் வாய்ப்பு கிடைக்காது
இந்நிலையில், முதல் டி20க்கான உத்தேச 12 வீரர்கள் கொண்ட அணியில் ரிஷப் பண்ட் பெயர் விக்கெட் கீப்பர் எனவும், தினேஷ் கார்த்திக் பெயர் மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களோடும் சேர்த்து இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், தினேஷ் கார்த்திக்குக்கு முதல் டி20 வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அவர் அணியில் இடம் பெற்றாலும் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார்.

உத்தேச இந்திய அணி - முதல் டி20
இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, கலீல் அஹ்மது, சாஹல்


Click it and Unblock the Notifications