“பேட்டிங் இருக்கட்டும், அத கவனீங்க” தினேஷ் கார்த்திக்கிடம் உள்ள முக்கிய பிரச்சினை.. இன்று தெரிந்தது
அடிலெய்ட்: வங்கதேச அணியுடனான போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கின் முக்கிய பிரச்சினை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேசத்திற்கு மழையின் காரணமாக 16 ஓவர்களி 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 145 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோற்றது,.

தினேஷ் கார்த்திக் அவுட்
இந்நிலையில் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களுக்கு அவுட்டான போதும், அவர் அவுட்டான விதம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 16வது ஓவரில் இந்திய அணி 130 க்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. விராட் கோலி - தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல ஃபார்மில் ஆடி வந்தனர். ஆனால் தேவையில்லாத ரன் அவுட் அப்போது ஏற்பட்டது.

பரபரப்பு சம்பவம்
சகிப் அல் ஹசன் வீசிய அந்த ஓவரில் விராட் கோலி எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்துவிட முயன்றார். ஆனால் பந்தை அங்கிருந்த ஃபீல்டர் தடுத்துவிட்டார். பந்து மிகவும் அருகில் இருந்த போதும், தினேஷ் கார்த்திக் ரன் ஓடி வா எனக்கூறிக்கொண்டே பிட்ச்-ன் பாதி தூரத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் கோலி வேண்டாம் என தடுத்துவிட்டார். எனினும் அதனை பார்க்காமல் தினேஷ் கார்த்திக் சென்றதால் 7 ரன்களுக்கு பரிதாபமாக அவுட்டானார்.

புதிய பிரச்சினை
இந்நிலையில் இதுதான் தினேஷ் கார்த்திக்கின் பிரச்சினையாக இருக்கிறது. துறு துறுவென இருக்கும் தினேஷ் கார்த்திக், எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனின் சிக்னலையும் பார்க்காமல் வேகமாக ரன் ஓடி விடுகிறார். இதனால் ரன் அவுட் ஆபத்தும் ஏற்படுகிறது. இதே போன்ற சம்பவம் தான் தென்னாப்பிரிக்காவுடனான போட்டியிலும் நடந்தது. சூர்யகுமாரின் சிக்னலை பார்க்காமல் ஓடிச்சென்று ரன் அவுட்டாகவிருந்தார்.

நிர்வாகம் எச்சரிக்கை
எனவே இனி வரும் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் இந்த பிரச்சினையை தீர்க்க அவருக்கு எச்சரிக்கை விடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பேட்ஸ்மேன் இதுபோன்று அவசரப்பட்டால், அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரும் பாதிக்கப்படும். எனவே ராகுல் டிராவிட்டே தினேஷ் கார்த்திக்கிடம் அமர்ந்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications