
ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்
அந்த அணியின் ஓப்பனிங் வீரர்கள் டிராவிஸ் ஹெட் 33, மிட்செல் மார்ஷ் 47 என சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இதன் பின்னர் வந்த அலெக்ஸ் கேரி 38 ரன்களும், மார்ன்ஸ் லபுசாக்னே 28 ரன்களையும் அடிக்க சவாலான ஸ்கோரை எட்ட முடிந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் இப்போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆட்டத்தின் 43வது ஓவரின் போது குல்தீப் யாதவ் பவுலிங் வீச சீன் அப்போட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது திடீரென மைதானத்திற்குள் புகுந்த நாய் ஒன்று அதிவேகமாக அங்கும் இங்குமாக ஓடியது. அதனை பிடிக்க மைதான ஊழியர்கள் நீண்ட நேரமாக பின் துரத்திக்கொண்டே சென்றனர். ஆனால் அவர்களால் நாயை பிடிக்கவே முடியவில்லை.

ஜடேஜாவின் உதவி
ஊழியர்களுக்கு உதவி செய்ய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் நாயை பிடிக்கும் பணியில் இறங்கினார். வழியை மறைத்துக்கொண்டு அவர் நின்ற போதும், சாதூர்யமாக செயல்பட்ட அந்த நாய், தப்பி ஓடிவிட்டது. இறுதியில் சுமார் 10 பேர் வரை நாயை துரத்தியும் அதனை பிடிக்க முடியாமல், மைதானத்தை 2 முறை சுற்றிவிட்டு தானாக வெளியேறிவிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. நாய் குறுக்கே வந்ததும் வீரர்கள் கொடுத்த ரியாக்ஷன்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடினமான இலக்கு
இது ஒருபுறம் இருக்க, இந்திய அணிக்கு 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. சேப்பாக்கம் மைதானத்தில் நேரம் ஆக ஆக பிட்ச் மிகவும் மெதுவாக மாறிவிடும். இதனால் பேட்டிங்கிற்கு சிரமமாக இருக்கலாம். எனவே இந்த ஸ்கோரை எட்டுவதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டரிலேயே நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications











