நமது வாசகர் திரு.வாசுதேவன் அனுப்பிய கிரிக்கெட் துணுக்குகள் -
1928 ஆம் வருடம். முதல் டெஸ்டில் அந்த ஆட்டக்காரர் எடுத்த ரன்கள் 18 மற்றும் 1. இரண்டாவது டெஸ்ட் சிட்னி( Sydney) மைதானத்தில் டிசம்பர் மாதம் துவங்கியது. அந்த ஆட்டக்காரர் 12 வது ஆட்டக்காரராக, (12th man) ட்ரிங்க்ஸ் இடைவேளையின் பொழுது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்களுக்கு பானம் கொண்டு சென்று குடிக்க கொடுத்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், இந்த ஒரே ஒரு முறை மட்டும் தான் 12 வது ஆட்டக்காரராக (12th man) திகழ்ந்தார். அவர்தான் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டனாக திகழ்ந்த ஸர் டான் ப்ராட்மேன். (Sir Don Bradman).

--------------------------------------------------
ஆர் இ பாஸ்டர் (RE Foster (1878 - 1914) இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் டீமக்கு கேப்டனாக திகழ்ந்தார். இங்கிலாந்து கால்பந்து அணிக்கு கேப்டனாக இருந்தார். இங்கிலாந்து ரக்பி யூனியன் அணிக்கு (England Rugby Union team) கேப்டனாக இருந்தார். இவர் சிட்னியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுக ஆட்டத்தில் 287 ரன்கள் எடுத்தார். இவர் ஆடியது மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. ஒரே ஒரு சதம் (287 ரன்கள்) அடித்து இருக்கிறார். சர்க்கரை நோய் காரணமாக 36வது வயதில் இறந்தார்.
இவரையும் சேர்த்து 7 சகோதரர்கள். எல்லோரும் மல்வேர்ன் கல்லூரியில் (Malvern College) பயின்றனர். ஏழு சகோதரர்களும் கவுண்டி கிரிக்கெட்டில் ஒர்சஸ்டர்ஷியர் அணிக்கு விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------
1952 ஜூன் மாதம் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானம். இங்கிலாந்து - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் துவங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 293 ரன்கள் ஆல் அவுட். விஜய் மஞ்சுரேகர் 133 ரன்கள், (Vijay Manjrekar) கேப்டன் விஜய் ல் ஹாசாரே 89 ரன்கள். (Captain Vijay Hazare).
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள், ஆல் அவுட். டாம் க்ரெவனே 71 ( Tom Gravebney) , ஏவன்ஸ் 66 (G Evans) ரன்கள் எடுத்தனர். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கமே சரியில்லை. முதல் நான்கு விக்கெட்டுகள் மள மளவென்று சரிந்தன. அப்பொழுது ஸ்கோர் போர்டு காட்டிய ஸ்கோர் 4 - 0 . (பூஜ்ஜியம் ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகள் விழுந்து
விட்டன).
விக்கெட்டுகள் விழ முக்கிய காரணம், அவரது முதல் டெஸ்டில் களம் இறங்கிய புதிய புயல் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ட்ரூமன். (Fred Truman). முதல் இன்னிங்சில் 3 இரண்டாவது இன்னிங்சில் 4 என்று மொத்தம் இந்திய அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
பங்கஜ் ராய் (Pankaj Roy), கெய்க்கவாட் (Datta Gaekwad), மந்திரி (Madhav Manttri), மஞ்சுரேகர் (Manjrekar), ராம்சந்த் (Ramchand) ஆகியோர் இரண்டாவது இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்கவில்லை. டக் அவுட் ஆனார்கள். இந்த தொடரில் ட்ரூமன் எடுத்த மொத்த விக்கெட்டுகள் 29. அவர் ஜெர்மனியிலிருந்து 17 மணி நேரம் பயணம் மேற்கொண்டு வந்து இந்த தொடரில் பங்கேற்றார்.
இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மூன்றாவது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 31 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவர் தான் முதன் முதலில் டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்தவர்.
------------------------------------------------
சுனில் கவாஸ்கர் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பல வேக பந்து வீச்சாளர்கள் வேகமாக வீசப்பட்ட பந்துகளை எதிர் கொண்டுள்ளார். பெரும் பாலானோர் மிகவும் சிறப்பாக பந்து வீசுபவர்களாக திகழ்ந்தனர். அவர்களில், குறிப்பாக இருவர் வீசிய பந்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் கவாஸ்கர்.
ஒருவர் வெகு வேகமாக வீசுவதில், ஆஸ்திரேலிய வேக பந்து வீசிய ஜெப் தாம்ப்சன்.( Jeff Thomson).
மற்றொருவர் எப்பொழுது வேண்டுமானாலும் தனது பந்து வீச்சு திறமையால், எந்த பேட்ஸ்மேனுடைய விக்கெட்டை வீழ்த்த கூடிய மேற்கு இந்திய தீவு ஓப்பனிங் பவுலர் ஆண்டி ராபர்ட்ஸ்.(Andy Roberts). இவரிடம் இரண்டு விதமாக பந்து வீச்சும் திறமை இருந்தது என்று கவாஸ்கர் குறிப்பிடுள்ளார்.
--------------------------------------------------
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பும், பிறகும் திகழ்ந்தவர் வால்டர் ஹாட்லீ. (Walter Hadlee). இவரது 5 பிள்ளைகளில், மூன்று பிள்ளைகள் நியூஸிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர்கள். அவர்களில் தன் தனி திறமையால், சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக முத்திரைப் பதித்தவர் ஸர் ரிச்சர்ட் ஹாட்லீ. (Sir Richard Hadlee).
புகழ் பெற்ற விஸ்டேன் (Wisden) 20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்த வால்டர் ஹாட்லீ, தனது வாக்கை தன் மகனான ரிச்சர்ட் ஹாட்லீக்கு அளித்தார். அதற்கு அவர் கூறிய பதில், நான் கருத்துக்கள் மற்றும் புள்ளி விவரங்கள் (Facts and figures) அடிப்படையில் தேர்வு செய்தேன் என்றார். அதற்காக அவரை பலரும் பாராட்டினார்கள்.
--------------------------------------------------
இவர் விளையாடியது மொத்தம் 6 டெஸ்டுகள். அடித்தது ஒரு சதம். அவருடைய அறிமுக டெஸ்டில். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு விளையாடியவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர். இவரது மகன் புகழ் பெற்ற கிரிக்கெட் டெஸ்ட் கேப்டனாக திகழ்ந்தவர்.மகன் பெயர் மன்சூர் அலிகான் நவாப் ஆப் பட்டோடி. (Mansoor Ali Khan Nawab of Patauadi). இவர் (தந்தை ) பெயர் இப்தகார் அலி கான் பட்டோடி (Iftikhar Ali Khan Pataudi).
கிரிக்கெட் தவிர ஹாக்கி மற்றும் போலோ (Hockey and Polo) விளையாட்டுகளில் சிறந்த வீரராக திகழ்ந்தவர். புகழ் பெற்ற பாடி லையன் தொடரில் (Body line series) லெக் சைடில் பீல்ட் செய்ய மாட்டேன் என்று கேப்டன் டக்ளஸ் ஜார்டேன் (Douglas Jardine) உடன் கருத்து வேறு பாட்டில் போர் கொடி தூக்கியவர். இவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். மிகவும் நேர்த்தியாக உடைகள் அணிவார்.
--------------------------------------------------
சில டெஸ்ட் மேட்ச்சுகளில் குறிப்பிட்ட ஒரு ஆட்டக்காரரின், ஆட்டம் முத்திரை பதிக்கும். அப்படிப்பட்ட டெஸ்டுகளில் இதுவும் ஒன்று. 1966 ஆம் வருடம். இங்கிலந்து - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த நான்காவது டெஸ்ட்.
முதலில் பேட்டிங் ஆடிய மேற்கு இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 240 ரன்கள் ஆல் அவுட். பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்து, தோல்வி அடைந்தனர்.
இங்கிலாந்து அணியில் பாசில் டீ ஒளிவேிர 88 (Basil D'Oliveira) (முதல் இன்னிங்ஸ்) பாப் பார்பர் 55 ( Bob Barber) (இரண்டாவது இன்னிங்ஸ்) அதிக பட்ச ரன்கள் குவித்தனர். மேற்கு இந்திய வீரர்கள் லான்ஸ் கிப்ஸ் 6 (Lance Gibbs) மற்றும் காரி சோபர்ஸ் 8 (Garry Sobers) விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
மேற்கு இந்திய வீரர்கள் நர்ஸ் 137 (Seymour Nurse) மற்றும் காரி சோபர்ஸ் 174 ரன்கள் (Garry Sobers) எடுத்தனர். காரி சோபர்ஸ் இந்த மேட்சின் கேப்டன். இந்த மேட்ச்சில் இரண்டு அணியின் ஆட்டக்காரர்களும் அடித்தது மொத்தம் 9 சிக்ஸர்கள். அந்த கால கட்டத்தில் டெஸ்ட் மேட்ச்சுகளில், அத்தி பூத்தாற் போல் எப்பொழுதாவதுதான் சிக்ஸர் காண முடியும்.
ஆட்டத்தின் முடிவில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பவுலராக திகழ்ந்த காரி சோபர்ஸ் 260 பந்துக்கள் எதிர் கொண்டு 174 ரன்கள் எடுத்தார். இவர் மொத்தம் 24 பவுன்டரிகள் அடித்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்க்ஸில் 41 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுக்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.
--------------------------------------------------
1930 ம் வருடம் அன்றைய மெட்ராஸ் டீமுக்காக எம் ஜே கோபாலன்( M J Gopalan) விஜயநகரம் கிரிக்கெட் அணிக்கு (Vizianagaram XI team) எதிராக விளையாடினார். இந்த அணியில் புகழ் பெற்ற ஆட்டக்காரர் ஜாக் ஹாப்ஸ் (Jack Hobbs) விளையாடினார். இரண்டு இன்னிங்சிலும் ஜாக் ஹாப்ஸின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர் எம் ஜே கோபாலன்.
--------------------------------------------------
இந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர். 83 டெஸ்டுகளில் 6806 ரன்கள் எடுத்தவர். 29 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 20 சதங்கள் இந்திய மண்ணில் அடித்து இருக்கிறார். அன்றைய மெட்ராஸ் டெஸ்டில், பாபு நட்கர்னி உலக சாதனை படைத்தார். 32 ஓவர்களில் 27 மெய்டன் ஓவர்கள் வீசி. அந்த ஓவர்களில் பெரும்பாலான பந்துகளை எதிர் கொண்டு தடுத்து ஆடியவர், இந்த ஆட்டக்காரர்.
இந்த பேட்ஸ்மன் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்த நகரத்திலேயே 50 வது வயதில் மாரடைப்பால் உயிர் துறந்தார்.
மேற்கு இந்திய தீவுகளின் பர்போடஸ் நகரத்தில்( Barbados) ( அங்கு தான் இவரது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் ) இவரது வாழ்க்கை முடிந்தது. இவர் பெயர் கென் பாரிங்டன் (Ken Barrington)
--------------------------------------------------
வாசுதேவன், பெங்களூரு.