அந்த பையன் சின்ன பையன்.. இப்படி தொந்தரவு பண்ணினா எப்படி.. கம்பீர் சொல்லும் இந்திய வீரர் யார்?
டெல்லி: ரிஷப் பன்டுக்கு அதிக அளவு அழுத்தம் தரக்கூடாது என்று கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. கிட்டத் தட்ட பாதி ஆட்டங்கள் முடிந்துவிட்டது. அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் யூகம் சொல்லி வருகின்றனர்.
உலக கோப்பையில் இந்திய அணி இந்திய அணி ஆடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. எனவே மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

பேட்டிங் பலம்
அணியின் பெரிய பலம் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் தான். முக்கிய வீரர்களாக தவான், ரோகித், கோலி ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால் அந்த போட்டியில் இந்தியாவுக்கு நிச்சய வெற்றி கிடைக்கிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதம் என்று பேட்டிங்கில் இந்திய அணி கலக்கி வருகிறது.

தவானுக்கு காயம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு காயம் ஏற்பட்டது. கைவிரலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே ஒரு வார காலம் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

வந்தார் ரிஷப் பன்ட்
அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட தவான் ஆடவில்லை. தவானுக்கு பதிலாக ராகுல் தான் விளையாடினார். காயம் ஆறாததால் உலக கோப்பை தொடரில் இருந்து தவான் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக அணியில் சேர ரிஷப் பன்ட் இங்கிலாந்து சென்றுவிட்டார்.

ஒரு மாதம் ஆகும்
இந்நிலையில், ரிஷப் பன்டுக்கு அதிக அழுத்தம் தரக்கூடாது என்று கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது: தவானின் காயம் குணமடைய இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடக்கூடிய தவான், விலகியது இழப்பு.

ரசிகர்கள் கிண்டல்
அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் இணைந்துள்ளார். அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஏற்கனவே தோனி இல்லாத ஆட்டங்களில் ரிஷப் பன்ட் ஆடியபோது, தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

அழுத்தம் கூடாது
தோனி இடத்தை ஒரே நாளில் ரிஷப் பன்டால் நிரப்ப முடியாது. இதை உணராதவர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதேபோல தவானுக்கு பதிலாக ரிஷப் அணியில் இணைந்துள்ளதால் அவர் மீது பெரியளவில் அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றார்.


Click it and Unblock the Notifications