வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான டக் பிரேஸ்வெல் (Doug Bracewell), அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான இவர், நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சில வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்.
கிரிக்கெட் ரசிகர்களால் 2011-ம் ஆண்டு ஹோபார்ட்டில் நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையைத் தனது ஸ்விங் பந்துவீச்சால் நிலைகுலைய வைத்தவர் இவர்தான்.

அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 40 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து அணி பெற்ற கடைசி டெஸ்ட் வெற்றி அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 முதல் 2023 வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடிய டக் பிரேஸ்வெல், அணியின் வேகப்பந்து வீச்சுத் துறையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
டெஸ்ட்: 28 போட்டிகள் - 74 விக்கெட்டுகள்
ஒருநாள்: 21 போட்டிகள் - 26 விக்கெட்டுகள்
டி20: 20 போட்டிகள் - 20 விக்கெட்டுகள்
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மொத்தம் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெலிங்டனில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
சமீப காலமாகத் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார் டக் பிரேஸ்வெல். குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட விலா எலும்பு காயம் அவரை வெகுவாகப் பாதித்தது. இதனால் உள்ளூர் போட்டிகளில் கூடத் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால், கனத்த இதயத்துடன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
டக் பிரேஸ்வெல் முதல் தர கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் என்ற இரட்டைச் சாதனையைப் படைத்த வெகு சில ஆல்ரவுண்டர்களுள் ஒருவர். 2012 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போதைய டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் SA20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. "எனது பயணம் முழுவதும் ஆதரவாக இருந்த பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி," என்று உருக்கமாக விடைபெற்றுள்ளார் இந்த ஹோபார்ட் ஹீரோ.