“எனக்கா இடமில்லை”.. வெறியாட்டம் ஆடிய இந்திய அண்டர் 19 கேப்டன்.. 8 ஃபோர், 7 சிக்ஸ்.. என்ன நடந்தது?
டெல்லி: ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என வர்ணிக்கப்பட்டவர். அண்டர்-19 உலகக்கோப்பையை வென்ற கேப்டன். ஆனால், ஐபிஎல் தொடரில் வாய்ப்புகள் மறுக்கப்பட, கடந்த ஆண்டு டெல்லி பிரீமியர் லீக்கிலும் (DPL) படுமோசமாக சொதப்ப, பலரும் இவரது கிரிக்கெட் கதை முடிந்துவிட்டதாகவே கருதினர். இந்நிலையில், அத்தனை விமர்சனங்களுக்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்து, வெறியாட்டம் ஆடி சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார் 22 வயது இளம் வீரர் யாஷ் துல்.
2022 அண்டர்-19 உலகக்கோப்பையை வென்ற பிறகு, யாஷ் துல்லை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் தான் விளையாடிய 4 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் விளைவாக, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை.

ஐபிஎல் புறக்கணிப்பு ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு நடந்த டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் யாஷ் துல் சோபிக்கவில்லை. அந்தத் தொடர் முழுவதும் அவர் வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். போதாக்குறைக்கு 2024-ல் இதய அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். இதனால், இளம் வயதிலேயே யாஷ் துல்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்தது.
வெறியாட்டமும், வரலாற்றுச் சாதனையும்
அனைத்தையும் தவிடுபொடியாக்கி, பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறார் யாஷ் துல். டெல்லி பிரீமியர் லீக் 2025 தொடரில், சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராகத் தனி ஆளாகப் போட்டியை முடித்தார். வெறும் 56 பந்துகளைச் சந்தித்த அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் விளாசி, இந்தத் தொடரின் முதல் சதத்தைப் பதிவுசெய்து வரலாறு படைத்தார்.
175 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, 2 விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் அசுர பலத்துடன் பேட் செய்த யாஷ் துல், தனது அணியை 17.3 ஓவர்களிலேயே வெற்றி பெற வைத்தார். இந்தப் போட்டியில், வெறும் 26.79% மட்டுமே டாட் பால்களை எதிர்கொண்டது, அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை சுட்டிக் காட்டுவதாக இருந்தது.
"நான் ஒரு டெஸ்ட் வீரர் மட்டுமல்ல, டி20யிலும் என்னால் சாதிக்க முடியும்" என்று தேர்வாளர்களுக்கும், ஐபிஎல் அணிகளுக்கும் உரக்கச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது யாஷ் துல்லின் இந்த இன்னிங்ஸ். இந்த வெறியாட்டத்தின் மூலம், மீண்டும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இந்த இளம் புயல்.


Click it and Unblock the Notifications