அம்மா.. அரைசதம் அடித்த பின் கண்ணீர் விட்டு கதறி அழுத நிதீஷ் ராணா.. தேற்றிய அம்பயர், வீரர்கள்
டெல்லி: 2026 டெல்லி பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அனுபவ வீரர் நிதீஷ் ராணா, பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது மறைந்து போன தன் தாயை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிதீஷ் ராணா 33 பந்துகளில் 60 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசி அபார அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பிறகு, சமீபத்தில் மறைந்த தனது தாயை நினைவுகூர்ந்து வானத்தை நோக்கிப் பார்த்தவாறு நிதீஷ் ராணா கண்ணீர் விட்டு அழுது கதறினார். இதைப்பார்த்த மைதானத்தில் இருந்த சக வீரர்களும் அம்பயர்களும் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

நிதீஷ் ராணாவின் தாய் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்கள் முன்பு காலமானார். தாயின் நினைவாக அவரது பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து நிதீஷ் ராணா விளையாடியிருந்தார். இந்த நிலையில், சவுத் டெல்லி அணிக்கு எதிராக அடித்த அரைசதத்தை தனது தாய்க்கு அவர் அர்ப்பணித்தார்.
இந்தப் போட்டியில் நிதீஷ் ராணாவின் அரைசதத்தின் உதவியால் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 169 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் நிதீஷ் ராணாவைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் குறிப்பிடத்தக்க ரன்களை சேர்க்கவில்லை.
அதனால் நிதீஷ் ராணாவின் இந்த போராட்டம் வீணானது. 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய களமிறங்கிய சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சவுத் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் சனத் சங்வான் 54 பந்துகளில் 111 ரன்களும் (10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்), அன்மோல் சர்மா 38 பந்துகளில் 55 ரன்களும் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.


Click it and Unblock the Notifications
