“வைபவ் சூர்யவன்ஷியை உடனே இந்திய அணியில் சேருங்க ஏன்னா..".. ரவி சாஸ்திரி அதிரடி கோரிக்கை
டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் 15 வயது இளம் அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷியை, வயது எதையும் பார்க்காமல் உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிசிசிஐ-க்கு அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை விட இரு மடங்கு வயது அதிகமான பந்துவீச்சாளர்களைச் சிறுவன் வைபவ் எதிர்கொள்ளும் விதம் பிரமிக்க வைப்பதாகவும், இதுவே அவர் இந்திய அணியில் அறிமுகமாகச் சரியான நேரம் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயதா, 15 வயதா அல்லது 16 வயதா என்பது எனக்கு முக்கியமல்ல. அவர் பேட்டிங் செய்யும் விதத்தையும், தன்னை விட இரண்டு மடங்கு வயது அதிகமான பந்துவீச்சாளர்களை அவர் சிதறடிக்கும் விதத்தையும் தான் நான் பார்க்கிறேன். அவருக்குப் பயம் என்பதே இல்லை. எனவே, வரும் ஜூன் மாதம் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும். ஒரு இளம் வீரரை ஊக்குவிக்க வேண்டும் என்றால், அதற்கு டி20 கிரிக்கெட் தான் மிகச்சிறந்த தளம்" என்று தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை
2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி காட்டி வரும் அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 440 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 40 மற்றும் ஸ்டிரைக் ரேட் 236.56 என்பது மலைக்க வைக்கிறது. குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 37 பந்துகளில் அவர் விளாசிய சதம் இப்போதும் கிரிக்கெட் ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்த சீசனில் இதுவரை அதிகபட்சமாக 40 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வைபவ் சாதனை படைத்துள்ளார்.
சாதனைப் பட்டியல்
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள் இதோடு முடிந்துவிடவில்லை. கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். பீகார் மாநிலத்திற்காக விளையாடி மிகக் குறைந்த வயதில் 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் சதம் அடித்த உலக சாதனையையும் இவர் தன்வசம் வைத்துள்ளார்.
தற்போது ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் நடைபெறும் 'இந்தியா ஏ', இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் வைபவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடர் முடிந்த கையோடு, ஜூன் இறுதியில் நடைபெறும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய சீனியர் அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்குமாஎன்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications
