ஒரு வழியாக புலி வெளிய வந்துருச்சு.. கடைசி 10 ஓவர்களில் 124 ரன்கள்.. சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற 340 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 40வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் வென்றால் தான் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற முடியும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேர்ஸ்டோவ் - மலான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் - மலான் கூட்டணி 48 ரன்கள் சேர்த்த நிலையில், பேர்ஸ்டோவ் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டேவிட் மலான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், ஜோ ரூட் வித்தியாசமான ஷாட்டை அடிக்க முயன்று 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் மலான் 87 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து வந்த ஹாரி ப்ரூக் 11 ரன்களிலும், பட்லர் 5 ரன்களிலும், மொயின் அலி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் - வோக்ஸ் கூட்டணி இணைந்து சிறிது பார்ட்னர்ஷிப் உருவாக்கியது. ஒரு கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து அதிரடி காட்டினார்.
ஒவ்வொரு ஓவருக்கும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ள, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. 44 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆர்யன் தத் வீசிய 45வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் 47வது ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 78 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 124 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications