இந்த பக்கமே வரக்கூடாது.. இந்திய அணி வீரரை தூக்கி எறிந்த பிசிசிஐ.. உள்ளூர் மேட்ச்சில் கூட இடம் இல்லை
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஹனுமா விஹாரி ஃபார்ம் இழந்து விட்டதாகக் கூறி 2022இல் இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் அளிக்கக்கூடாது என்ற முடிவில் இருக்கும் பிசிசிஐ உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடரிலும் அவரது பெயரை சேர்க்கவில்லை.
இதன் காரணமாக குறைந்தபட்சம் ஹனுமா விஹாரி தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பை கூட பிசிசிஐ அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கடைசியாக 2022இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடி இருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதேசமயம், அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 51.8 ஆக உள்ளது. ஆனாலும், அவரது சர்வதேச டெஸ்ட் பேட்டிங் சராசரி 33.5 என்பதை சுட்டிக் காட்டி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் டிராபி டெஸ்ட் தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் இடம் பெறுகின்றனர். அவர்களை தவிர்த்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் பல வீரர்களுக்கும் இந்த தொடரில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கான ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது பிசிசிஐ. மொத்தம் நான்கு அணிகளில் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். ஆனால், ஹனுமா விஹாரிக்கு இந்த தொடரில் எந்த அணியிலும் இடம் அளிக்கப்படவில்லை.
33 வயதாகும் சூர்யகுமார் யாதவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் இந்திய டெஸ்ட் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். அதன் பின் அவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென அவருக்கு துலீப் டிராபி தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரை டெஸ்ட் அணியில் சேர்க்கும் நோக்கத்தில் பிசிசிஐ இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் 30 வயதே ஆகும் ஹனுமா விஹாரிக்கு உள்ளூர் போட்டித் தொடரில் கூட வாய்ப்பு அளிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications