துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய சி அணிக்காக விளையாடிய இசான் கிஷன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ரிஷப் பன்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் ஒரு ஆண்டுக்கு மேல் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார்.
இதனால் அவருக்கு பதில் இஷான் கிசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள், டி20 அணி மட்டும் அல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இசான் கிஷன் களம் இறங்கி அபாரமாக விளையாடினார்.

இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி மொத்தமாக 78 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். அதன் பிறகு ஐசிசி ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இஷான் கிஷன் இடம்பெற்றிருந்தார். ஆனால் அந்தத் தொடர் முடிவடைந்த பிறகு தமக்கு மனச்சோர்வு ஏற்பட்டு விட்டதாக கூறி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார்.
எனினும் இசான் கிஷன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில்லை என கூறி அவரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. அதன் பிறகு இஷான் கிசனை இந்திய அணியிலே சேர்க்காமல் பிசிசிஐ கழற்றிவிட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார்.
தற்போது துலீப் கோப்பை தொடரின் இசான் கிஷன் தேர்வான பிறகு முதல் சுற்று போட்டிகள் தொடங்கும் போது காயம் ஏற்பட்டதாக கூறி விளங்கினார். இந்த நிலையில் மீண்டும் தற்போது அணிக்கு திரும்பியிருக்கும் இசான் கிஷன், அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.121 பந்துகளில் சதம் விளாசிய இசான் கிசான் 126 பந்துகளில் 111 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 14 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.
தற்போது டெஸ்ட் அணியில் ரிஷப் பன்ட் துருவ் ஜூரல் போன்ற வீரர்கள் ஏற்கனவே இடம் பிடித்து விட்டனர். இதனால் கிஷன் தற்போது கடுமையாக போராடினால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும். தமக்கு கிடைத்த வாய்ப்பை தேவையில்லாமல் வீணடித்துவிட்டு பின் பிசிசிஐ கோபத்திற்கும் ஆளாகி இந்திய அணிக்கு செல்லும் வாய்ப்பை இசான் கிஷன் கடுமையாக்கி கொண்டார். இதனால் மீண்டும் அவருக்கு இந்திய அணியில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை.
இந்த நிலையில் இந்தப் போட்டியின் இரண்டாவது பந்திலேயே காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ், 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மீண்டும் களத்திற்கு வந்த ருதுராஜ் அபாரமாக விளையாடி ஏழு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். இதில் 50 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் 136 பந்துகளில் 78 ரன்கள் குவித்திருக்கிறார்.
அபிஷேக் போரெல் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 79 ஓவர் முடிவில் இந்திய சி அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 357 ரன்கள் குவித்து இருக்கிறது. இதில் இந்திய பி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளும் நவ்தீப் சைனி,ஒரு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.