மும்பை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த இளம் வீரர்கள் பலரும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் கில், கே எல் ராகுல்,ரிஷப் பந்த் போன்ற வீரர்களும் இந்த தொடரில் களம் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அடுத்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வு குழுவினர் துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருபவர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களின் சம்பளம் என்ன? இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம்.
முன்பெல்லாம் துலீப் கோப்பை தொடர் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு அதிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் இம்முறை வெறும் 4 அணிகள் விளையாடுகிறது. ஒவ்வொரு அணியிலும் பல மண்டலத்தில் இருந்து வரும் வீரர்கள் விளையாடுகிறார்கள். முன்பெல்லாம் துலீப் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும் வகையில் பரிசு தொகையை ஒரு கோடி ரூபாயாக பி சி சி ஐ உயர்த்தி இருக்கிறது. இதனால் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம். ரஞ்சி கோப்பையில் 41 போட்டிகளுக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 60,000 கிடைக்கும். இதனால் இந்த போட்டியில் நான்கு நாட்கள் விளையாடும் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். அதுவே ரஞ்சி போட்டியில் 21 முதல் 40 போட்டிகள் விளையாடு வீரர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
இதன் மூலம் நான்கு நாள் ஆடும் ஒரு போட்டிக்கு சம்பளமாக 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதேபோன்று 20 போட்டிகள் மற்றும் அதற்கு கீழ் விளையாடும் வீரர்களுக்கு ஒரு நாளுக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் நான்கு நாள் ஒரு வீரர் விளையாடினால் அவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். தற்போது துலீப் கோப்பையில் சதம் அடித்து கலக்கி இருக்கும் முசீர் கானுக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் 4 நாட்கள் நடைபெறும் ஒரு டெஸ்ட்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பெறுவார்.
அது மட்டுமல்லாமல் துலீப் கோப்பையில் இறுதி போட்டி வரை முசிர் கான் விளையாடினால் அவருக்கு நான்கு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். இதுவே ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் போல நட்சத்திர வீரர்கள் மூன்று போட்டிகளும் விளையாடினால் அதிகபட்சமாக 7,20,000 சம்பாதிக்கலாம். உள்ளூர் போட்டி என்பதால் ரஞ்சிப் போட்டிக்கு வழங்கப்படும் அதே சம்பளம் தான் துலீப் கோப்பை க்கும் கிடைக்கும். இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினாலே வீரர்கள் லட்சம் ரூபாயாக சம்பாதித்து வாழ்க்கையை வசதியாக வாழலாம்.