குல்தீப் யாதவ் பவுலிங் அட்டாக் செய்ய ரிஷப் பண்ட் தான் காரணம்.. முஷீர் கான் கொடுத்த ட்விஸ்ட்!
பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது. இதில் இந்திய பி அணிக்காக ஆடிய 19 வயதாகும் முஷீர் கான் 105 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா பி அணி தவித்து வந்தது.
ஆனால் 9வது பேட்ஸ்மேனாக வந்த நவ்தீப் சைனியுடன் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முஷீர் கான் அசத்தியுள்ளார். யு19 உலகக்கோப்பை தொடரிலேயே அசத்தலாக ஆடி கவனம் ஈர்த்த முஷீர் கான், ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி சுற்றில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து ரஞ்சி டிராபி அரையிறுதியில் அரைசதம், இறுதிப்போட்டியில் சதம் விளாசிய நிலையில், துலீப் டிராபியிலும் சதம் விளாசி மிரட்டியுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடி வரும் கலீல் அஹ்மத், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், சிவம் துபே, குல்தீப் யாதவ் உள்ளிட்டோரை எதிர்த்து சதம் விளாசி இருப்பது தான் முஷீர் கான் மீதான ஆச்சரியத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் முஷீர் கானின் திறமையை வியந்து வருகின்றனர். சர்ஃபராஸ் கானின் சகோதரரான முஷீர் கான் இந்திய அணியில் விரைவாக இடம் பிடிப்பார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் துலீப் டிராபியில் சிறப்பாக ஆடி சதம் விளாசியது குறித்து முஷீர் கான் பேசுகையில், பிட்ச் ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. இதனால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருந்தேன். ரன்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஒவ்வொரு செஷனாக, ஒவ்வொரு பந்தாக விளையாட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டேன்.
ஏனென்றால் நீண்ட நேரம் களத்தில் இருந்தால், நிச்சயம் ரன்கள் வந்து சேரும். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போது, சைனி அண்ணா தான் எனக்கு நம்பிக்கை அளித்தார். ஒரு பக்கத்தில் என்னால் தாக்கு பிடிக்க முடியும் என்று போராடினார். அவர் எவ்வளவு பந்துகளை எதிர்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் களத்தில் உறுதியாக நின்றதன் மூலமாக தான் என்னால் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடிந்தது.
அதேபோல் குல்தீப் யாதவ் பாய் பவுலிங்கில் ரன்கள் சேர்க்க முடிந்ததற்கு ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் குல்தீப் யாதவை இரண்டாவது முறையாக எதிர்கொள்கிறேன். அவர்கள் இருவரும் எனக்கு எப்படியான பந்துகளில் குல்தீப் யாதவ் அட்டாக் செய்வார் என்று தெளிவாக கூறியிருந்தனர்.
அதேபோல் எப்படியான பந்துகளை அடிக்க வேண்டும் என்று எனக்கு சில சீக்ரெட்டை கூறினார்கள். அதனால் செட்டிலன பின், பேட்டிங் செய்ய எனக்கு எளிதாக இருந்தது. மேலும் சீனியர் வீரர்களுடன் பேட்டிங் செய்வதும், ஓய்வறையில் இருப்பதும் மிகப்பெரிய அனுபவமாக அமைந்திருக்கிறது. அவர்களின் மனநிலை என்ன, எப்படி தயாராகிறார்கள் என்பதை அருகில் இருந்து காண முடிகிறது. அது தான் ஒரு கிரிக்கெட்டராக வளர்ச்சி பெறுவதற்கு உதவியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications