ஆனந்தபூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணி விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இந்தியா சி அணி 168 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய சி அணி 4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை இந்தியா டி அணி தொடங்கியது.
அதில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் செஷனிலேயே இந்தியா டி அணி 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 54 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சி அணி சார்பாக மனவ் சுதார் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இடதுகை ஸ்பின்னரான மனவ் சுதாரின் பவுலிங் முன்னணி வீரர்களையும் திண்டாட வைத்தது. பின்னர் 233 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் பவுண்டரிகள் மூலமாக விரைவாக ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 64 ரன்கள் சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் சர்ன்ஷ் ஜெய்ன் பவுலிங்கில் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரஜத் பட்டிதர் - ஆர்யன் ஜுயல் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ஸ்பின்னர்களின் பவுலிங்ஸில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்று ரஜத் பட்டிதர் எளிதாக பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
உணவு இடைவேளைக்கு பின்னரும் தொடர்ந்த இவர்களின் பார்ட்னர்ஷிப் 88 ரன்களை எட்டிய போது, சர்ன்ஷ் ஜெய்ன் பவுலிங்கில் டவுன் தி ட்ராக் இறங்கி வந்து அட்டாக் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து ஏமாற்றி கீப்பரின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனால் 77 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே ஆர்யன் ஜுயலும் 47 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த இந்திரஜித் 7 ரன்களிலும், ஹிருத்திக் ஷொக்கின் டக் அவுட்டாகினார்.
இதனால் 191 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா சி அணி திண்டாடியது. ஆட்டம் எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நேரடியாக சரன்ஷ் ஜெய்ன் மற்றும் அக்சர் படேலுக்கு மட்டுமே ஓவர்களை கொடுத்தார். ஆனால் இளம் விக்கெட் கீப்பராக அபிஷேக் போரல் - மனவ் சுதார் கூட்டணி எந்தவித சலனமும் இல்லாமல் பேட்டிங் செய்தனர்.

தேநீர் இடைவேளை வரை தாக்குபிடித்த இருவரும், அதன்பின் அதிரடியை தொடங்கினார். இந்தியா சி அணியின் ஸ்கோர் 210 ரன்களை கடந்த பின், மனவ் சுதார் சிக்ஸ், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். இறுதியாக 61 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்து இந்தியா சி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய அபிஷேக் போரல் 35 ரன்களும், மனவ் சுதார் 19 ரன்களும் சேர்த்தனர்.
இந்தியா டி அணி தரப்பில் சரன்ஷ் ஜெய்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச் மாறினாலும், பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எதிர்கொண்ட விதம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியா பி அணியை எதிர்த்து இந்தியா சி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.