பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன், 101 பந்துகளில் அதிரடியாக 3 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 106 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், இலங்கை டி20 தொடரில் பேட்டிங் ஃபார்மை இழந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட்டது, இனியும் வாய்ப்பளிக்க தேவையில்லை என்று கொந்தளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரளா டி20 லீக் தொடரில் விளையாடி வந்த சஞ்சு சாம்சன், துலீப் டிராபி தொடரின் 2வது சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக 45 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதனால் 3வது சுற்றிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டி அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா டி அணி முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து கடைசி வரை களத்தில் இருந்த அவர், 83 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இதனால் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி சதத்தை எட்டினார். சிறப்பாக ஆடிய அவர் 101 பந்துகளில் 3 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 106 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் 349 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதன் மூலமாக அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் முன்னிலையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஃபார்மை நிரூபித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட்-க்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.