எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது? 33 வயது வீரருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்.. நொந்து போன சக வீரர்கள்
மும்பை: யாரும் எதிர்பாராத வகையில் இந்திய டெஸ்ட் அணியில் 33 வயதான ஒரு வீரரை களமிறக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு செய்து இருக்கிறார். ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணியில் பேட்ஸ்மேன்களுக்கு இடையே அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி இருக்கும் நிலையில், அவர் எடுத்து இருக்கும் இந்த முடிவு மற்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாக அறிவிக்கப்பட்டார் 33 வயதான சூர்யகுமார் யாதவ். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர், 2026 டி20 உலகக் கோப்பை வரை இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என கூறப்பட்டது. அதே சமயம் அவர் ஒரு நாள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். கடைசியாக 2023 ஒரு நாள் போட்டி உலகக்கோப்பையில் அவர் பங்கேற்றார்.

அதன் பின்னர் சூர்யகுமார் ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் இனி டி20 அணியில் மட்டும் தான் இடம் பெறுவார் என கூறப்பட்டு வந்தது. அதற்கு முன்னதாக ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் மட்டுமே அவர் விளையாடி இருக்கிறார். அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் தேர்வுக் குழுவினர் டெஸ்ட் அணியில் அவரை ஒரு பொருட்டாக கருதவில்லை.
மேலும், அவருக்கு 33 வயதாகும் நிலையில் இனி அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற நிலையே இருந்தது. ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சூர்யகுமார் யாதவுடன் இலங்கை டி20 தொடரில் சேர்ந்து செயல்பட்ட போது அவரது செயல்பாடுகள் அவரை ஈர்த்து இருப்பதாகவும், இதை அடுத்து அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன் காரணமாக சூர்யகுமார் யாதவை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுமாறு கம்பீர் அறிவுறுத்தி இருக்கிறார். அதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சூர்யகுமார் யாதவை ஆட வைக்க கவுதம் கம்பீர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சூர்யகுமார் யாதவ் புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் மும்பை அணி சார்பில் பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து இந்திய அளவில் நடைபெறும் துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இந்த போட்டிகளில் அவர் சிறப்பாக ரன் குவிக்கும் பட்சத்தில் அவருக்கு வங்கதேச டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில், கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ரஜத் படிதார் என பல வீரர்கள் உள்ளனர். அவர்களில் சிலருக்கே வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால், சாய் சுதர்ஷன், இஷான் கிஷன் ஆகியோர் தங்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா? என காத்துக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக 33 வயதான சூர்யகுமார் யாதவை களம் இறக்கி விட்டுள்ளார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.


Click it and Unblock the Notifications